வெள்ளி, 27 டிசம்பர், 2024

நற்குடும்பமே நல்ல சமூகத்திற்கு விதை

 ஆசிரியர்களை விட பெண்கள்தான் எதிர்கால சமூகத்துக்கு மிகப் பெரும் சொத்து. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நமது மரபில் கொண்டாடப்படும் வரிசை. ஒரு குழந்தையின் வாழ்வியல் சரியான பாதையில் செல்வதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுப்பவள் தாய்.

பின்னர் பிதா குரு என்பவர்களால் சரியாக வழிகாட்டப்பட்டு தெய்வத்தை உணர்ந்து கொள்கிறது ஒரு குழந்தை. அப்படி ஒருவரின் வாழ்வியலை உருவாக்கும் பெண், தாரம், மாமியார்,மருமகள் எனப் பல்வேறு பெயர் கொண்ட உறவு முறைகளில் ஒரு குடும்பத்தின் வாழ்வியலை கட்டிக் காத்து சரி செய்து அதன் ஒழுங்கமைவில் எந்தச் சிதைவும் ஏற்படாமல் கண்காணித்துப் பாதுகாக்கிறாள்.
இதனால்தான் பெண்ணைப் போற்றி வணங்கும் முறை இந்த மண்ணில் இருக்கிறது. மலையையும் நதியையும் தாயாய் வணங்குகிறோம், இந்த மண்ணினைத் தாயாய் வணங்குகிறோம். மலையிலும் நதியிலும் மண்ணிலும் அதன் தாய்மை குணத்தைக் கண்டு வணங்குகிறோம்.
ஆணின் பந்தாவான வீரப் பேச்செல்லாம் வெளியில் மட்டும்தான். ஒரு தாயிடமும் தாரத்திடமும் அவன் தன்னை தாழ்த்திக் கொள்கிறான். அதனைக் கேலிப் பொருளாக்கி சமூகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கினாலும் அவர்களும் தாரத்தின் முன்னர் சரணென நின்றிருப்பவராகத்தான் இருப்பர். இதில் இழிவொன்றும் என்றும் இல்லை.
ஏனெனில் பெண்ணின் ஆதிக்கம் ஓங்கி நிற்பதும் அது வாஞ்சையாய் வணங்கி நிற்பதும் கொஞ்சிப் பேசுவது என எதை எடுத்துக் கொண்டாலும் அதன் நோக்கம் குடும்ப நலனும் நல்ல வாழ்வியலும் என்பதாக மட்டுமே இருக்கும்.
மனமொத்து மணந்த இருவரோ மனமொத்த குடும்பங்கள் இணைத்த இருவரோ இணைந்து உருவாக்கும் குடும்பங்கள் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். வாழ்வில் நிலைத்து நிற்பது பணம் என்பதனை முன்னிறுத்தி தொழில் வேலை பிறகு திருமணம் என்று வரும் இடங்களில் பெரும்பாலும் தனித்துவம், தனிமனித உரிமை, எனக்கானது என்று பேசுகிற இடத்தில் குடும்பம் வாழ்வியல் என்பன பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன.
வாழ்வியல் என்பதில் நமது அறத்திற்கு முன்னுரிமை இருக்க வேண்டும். அறம் சார்ந்த வாழ்வியல் என்பது நமது பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்த செயல்களாக இருக்கிறது. அந்த அறத்தில் தனி மனிதனை விட குடும்பம், உறவு, சமூகம் என ஒட்டு மொத்த மனிதனுக்கும் ஆண், பெண் பேதமற்று கிடைக்கும் உரிமையும் நலனுமன்றி தனிமனிதர் சார்ந்து மட்டுமான உரிமையும் நலனும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும்.
ஆனால் இன்றைய இளைய சந்ததிக்குப் போதிக்கப்படுவதெல்லாம் இந்த ஒட்டுமொத்த நலனை முன்னிறுத்துகிற பாரம்பரியம் மூட நம்பிக்கை, பழம் பஞ்சாங்கம், பட்டிக்காடு என்று சொல்லப்பட்டு அது ஏதோ இழிவான ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது. மரபுகளைச் சிதைப்பதும், அழிப்பதும் மட்டுமே மூடநம்பிக்கை அற்றது முற்போக்கு சிந்தனை என்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது.
தன் நலத்தை மட்டுமே முன்னிறுத்துகிற ஒரு ஆணிடம் நீங்கள் பெண்ணின் பாதுகாப்பினை எப்படி எதிர்நோக்க இயலும். நான் விரும்புகிறேன் எனக்கு அது வேண்டும் அதனை எப்படியேனும் பெறவேண்டும் என்ற மூர்க்கத்தனம் ஊறி நிற்கிற ஒரு ஆண் சமூகத்துக்கு தீங்கானவன். எனக்குக் குடும்பத்தை விட எனது விருப்பம் மட்டுமே முதன்மையானது என்கிற பெண்ணால் குடும்பத்தின், சமூகத்தின் நலனை நினைத்து அதனை முன்னிறுத்திச் செயல்படும் குழந்தையை உருவாக்க இயலும்.
நமது சமூகம் பாதுகாப்பாகவும் மகிழ்வோடும் இருக்க வேண்டும் என்றால் அதன் மீது அக்கறை கொண்டவர்கள் உருவாக வேண்டும். அதற்கு நமது மண்ணின் அறம் சார்ந்து இயங்கக் கூடிய குடும்ப அமைப்பு முறை வலுப்பெற வேண்டும்.
காலத்திற்கேற்ப நமது குடும்ப அமைப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அதனைச் சிதைக்கிற முறையில் மேற்கத்திய கலாசார முறைகளை தமது குடும்பத்தில் செயல்படுத்துபவர்களும், அதனை ஆதரித்து எழுதுபவர்களும்தான் இன்றைய நவீன சமூக விரோதிகள் என்பதனை நாம் அடையாளம் காண வேண்டும்.
ஆணோ பெண்ணோ கோழையாய் இருப்பதால் என்ன பயன். ஒரு ஆணோ பெண்ணோ கோழையினை மணம் முடிப்பதால் என்ன பயன். ஆபத்து வருகையில் உடன் நின்று ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயலாத ஒரு ஆணைக் காதலிப்பதோ கரம் பிடிப்பதோ பெண்ணுக்கு ஏற்றதல்ல. அதற்காக முரடனையும் ரவுடியையும் தேடிப் பிடித்து மணம் புரிவது பிழையாகும். சினிமாவில் இப்படி முரடனையும் ரவுடியையும் பெண் விரும்பிக் காதலிப்பதாகக் காட்டுகிறார்கள். இது சிந்தனைத் திணிப்பு.
சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நமது பாரம்பரிய அறத்தை விட மேற்கத்திய சிந்தனைகளையும் அறத்திற்கு மாறான சுயநலச் செயல்களையும் சரி என்பது போலக் காட்டுகிறார்கள். பொது நலத்தை விட சுயநலமே சிறந்தது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அறமற்ற சிந்தனையை இந்த ஊடகம் நமது கலாசாரத்தை பண்பாட்டை குடும்ப அமைப்பினைச் சிதைப்பதற்காகச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணூக்கு ஆணை மதிக்கவும், ஒரு ஆணுக்குப் பெண்ணை மதிக்கவும் கற்றுத் தரவேண்டும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டு வேலைகளை இருபால் குழந்தைகளையும் செய்யச் சொல்ல வேண்டும். பெண்ணுக்கு உடல்நலமில்லாத நாட்களில் வீட்டு வேலையினை முழுவதுமாக அந்த வீட்டு ஆண்கள் பகிர்ந்து செய்ய வேண்டும். இந்த வேலை பகிர்வு எந்நாளும் இருக்க வேண்டும்.
நமது உறவின் விழாக்களுக்கும் அங்கு சென்று உறவுகளோடு மரியாதையோடும் அன்போடும் பழக அனைத்துச் சூழ்நிலைகளையும் சலிப்பில்லாமல் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிற ஒரு நிலையினை குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும்.
நமது வீட்டில் ஒவ்வொரு பண்டிகையையும், சடங்கு சம்பிரதாயங்களையும் சொல்லித் தந்து தவறாமல் கொண்டாட வேண்டும். இது மரபின் நீட்சி; மூடநம்பிக்கை அல்ல. மக்களின் இணைப்புக்கான நூல். அதனைச் சிதைக்கத்தான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்றெல்லாம் பல கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சிக்கித்தான் நமது பாரம்பரியத்தின் இணப்பும் மரபின் நீட்சியும் சிதைந்து வருகிறது. அது நமது தொன்மையையும் வரலாற்றையும் அழித்து விடும்.
அது போல சொந்த கிராமம் என்பது நாம் எங்கு சென்றாலும் அது நமது கருவறைத் தொடர்பு என்ற நினைவு இருக்க வேண்டும். நாம் பிறந்து வளர்ந்த ஊர், பூர்வீகம் அந்த ஊர் திடுவிழாக்கள் அதைத் தொலைத்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் அதன் அருமை அதிகமாகத் தெரியும்.
பூர்வீக கிராமத்தின் திருவிழாக்கள் அந்த ஊரின் ஒட்டு மொத்த சமூகத்தோடு நம்மை இணைக்கும் விழா. சமூக ஒற்றுமையை வலிமையாக்குபவை அவை. அவற்றைத் தவறவிடாமல் நமது குழந்தைகளோடு சென்று கொண்டாடுவது என்பது மிகுந்த அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும். பள்ளியில் இருக்கும் சிறு தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இதனைப் புறக்கணித்து குடும்பம் சமூகம் இவற்றின் பிணைப்பினை ஒற்றுமையினை நாம் நீர்த்துப் போகச் செய்யல் ஆகாது.
இவற்றை எதையும் நாம் செய்யாமல் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு குறை சொல்வதிலும் குற்றம் சுமத்துவதிலும் எந்த நியாயமும் இருக்காது.
நல்ல சமூகம் என்பது அங்கு பெண்கள் தேவதைகளாக தெய்வங்களாக மதிக்கப்படுவர். அவர்களுக்கு எந்த தீங்கும் நேராமல் ஆண்கள் பாதுகாப்பர். குடும்பங்களில் ஆண்கள் பெண்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நடப்பர். ஒரு குடும்பத்தின் தலைமை என்பது என்றும் பெண் தான் என்ற புரிதல் இருக்கும். ஆணை அவள் முன்னிறுத்தினாலும் அவனை இயக்கும் நற்சக்தியாய் அவள் திகழ்வாள்.
நற்சமூகம் என்பது சக்தியின் கைகளில். சக்தி என்பது அனைத்து தெய்வங்களிலும் பேதமின்றி உறைந்து நிற்பது. நமது தேசத்துப் பெண்களின் உள்ளத்தில் முப்பெரும் தேவியரின் சக்தி நிறைந்து நிற்கட்டும். சூலம் வேல் என அவர்களின் கைகளில் அபரிமித ஆற்றலும் வீரமும் வெளிப்படட்டும். சக்தி கொண்ட சமூகத்தை அவர்கள் சமைத்தளிக்கட்டும். பெண்மையின் தாய்மை என்பது மென்மை மட்டுமல்ல; குலம் காக்கும் வன்மையும் கொண்டது.
ஓம் சக்தி பராசக்தி

வியாழன், 28 நவம்பர், 2024

 அமரன் - இந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அமரன் என்ற வார்த்தைக்கு  நிரந்தரமானவன் என்ற பொருள். ஒருவன் நிரந்தரமாக வாழ்வது சாத்தியமில்லை; ஆயின் தனது வாழ்வியலாலும் செய்யும் செயல்களாலும் அமரத்துவம் பெறுகிறான். முந்தைய திரைப்படத்தை விட இந்தத் திரைப்படத்திற்கு இந்தப் பெயர் மிகச் சரியாக பொருந்தி நிற்கிறது.




ஒரு பயங்கரவாதி மக்களை அழிக்கத் தன் உயிர் துறக்கிறான். ஒரு ராணுவ வீரன் தனது தேசத்தின் மக்களைக் காக்க உயிர் துறக்கிறான். 

ஒரு பயங்கரவாதி பல அப்பாவி மக்களைக் கொல்லும் தனது தீச்செயலைத்.தடுத்து நிறுத்தும் ராணுவ வீரனைக் கொல்கிறான். ஒரு ராணுவ வீரன் பல அப்பாவி உயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு பயங்கரவாதியின் உயிரை எடுக்கிறான்.

இதில் ராணுவ வீரனின் செயல்தான் புனிதமானது. ஆனால் புனிதத்திற்கும் மனிதத்திற்கும் ஆதி காரணமாக அமைந்த இந்தத் தேசத்தில்தான் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கும் அவர்களது இயக்கங்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது.

அமரன் திரைப்படம் தமிழகத்தில் மக்களின் மனதில் உறங்கிக் கிடக்கும் தேசிய உணர்வினை சிறிதளவு தட்டி எழுப்பி இருக்கிறது. அதனையே இங்குள்ள பிரிவினைவாதிகளால்.தாங்கிக் கொள்ள இயலவில்லை. உடனே இந்தத் திரைப்படத்தின் உண்மை நாயகனான முகுந்த் வரதராஜன் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

இதனை மதம் சார்ந்த அரசியலாக மாற்ற மதத்தினைச் சார்ந்து இயங்கும் அரசியலமைப்புகள் முயல்கின்றன. சமூக வலைத்தளங்களில் ஹிந்துக்கள் மதம் சார்ந்த வெறுப்புணர்வுடன் நடந்து கொள்வது போல ஒரு கட்டமைப்புடன் கற்பனைக் கதைகளை எழுதுகிறார்கள்.

திரைப்படம் பார்க்கும் வெறி கொண்டு அலைந்த நான் திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பவனாக மாறி இருக்கிறேன். இவ்வளவு விமர்சனங்களை பார்த்தபிறகு அமரன் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது.

உடன் குடும்பத்துடன் சென்று பார்க்க இணையவழியில் திரைப்படம் பார்க்க முன்பதிவு செய்தேன். அநேகமாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்ததாகவே இருந்தது. அரங்கில் அப்படி ஒரு அமைதியை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. பயங்கரவாதத்தின் அழுத்தத்தை தமிழகம் அதிகளவு கண்டதில்லை. அந்நிய படையெடுப்புகளினால் நிகழ்ந்த தாக்கங்களும் தேசத்தின் பிறபகுதிகளை ஒப்பிடுகையில் தென்பகுதியில் குறைவு; அதிலும் தமிழகத்தில் இன்னும் சற்று குறைவு. அந்த அழுத்தம் பார்வையாளர்களிடம் அந்த அமைதியை உருவாக்கி இருந்தது.

கண்ணீர் விடாமல் அமரன் திரைப்படத்தை பார்த்தவர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்திருக்கும். அந்த அளவுக்கு அது.தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் குடும்பக் காட்சிகளில் மட்டும் ஒரு ஒட்டுதல்.இல்லை. ஒரு உண்மை இயக்குநரை பாதித்து அதனைக் காட்சியாக்குவது போல செயற்கையை காட்சியாக்குவது போலித்தனமாகவவும் கதையோட்டத்துடன் ஒட்டாததாகவும் மாறிவிடும்.

தலைவன் தலைவி காதலில் இருந்த ஒட்டுதல் குடும்பத்துடனான காட்சிகளில் அந்நியப்பட்டு நிற்கிறது. அதீத செயற்கைத்தனமாகவே அக்காட்சிகள் இருந்தன. கதாபாத்திரங்களின் நடிப்பும் வசனங்களும் கூட அவ்வாறே. அச்சமில்லை பாடலை முகுந்த் தனது குழந்தைக்கு சொல்லித் தரும் காட்சியும்,  இராணுவ வாகனத்தில் வீரர்கள் அந்தப் பாடலுக்கு காட்டும் உணர்வுகளும் அருமை அசத்தல்.

இதில் இன்னொரு தரப்பு விமர்சனமாக தலைவன் பிராமணர் என்பது மறைக்கப்பட்டது. அதற்கு இயக்குநர் கொடுத்த விளக்கம் நகைப்புக்குரியது. முகுந்தின் பெற்றோர் அவர் தன்னை பிராமணர் என்பதைவிட இந்தியனாக நினைப்பதிலையே பெருமை கொண்டிருந்தார் என்று சொல்லியதால் அவரை பிராமணராகக் காட்டவில்லை என்று.

இந்த இடத்தில் எனக்கு எழும் கேள்வி பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையா அல்லது பிராமணர்கள் தவிர பிற ஜாதியார் தங்களை இந்தியர்களாக நினைப்பதில்லையா? என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் இந்த விளக்கத்தின் வாயிலாக.

முகுந்த் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வளவுதான். அவரது குடும்பமோ அல்லது அவரது மனைவியின் குடும்பமோ அதை விரும்பவில்லை என்பதாகக் காட்டுகிறார்கள். நாயகிக்கும் நாயகன் மீதான காதல் மட்டுமே காட்டப்படுகிறது. ராணுவம் என்பது நாயகனின் கனவு என்பதைத் தாண்டி அவருக்கு ராணுவத்தின் மீதாக எந்த ஈர்ப்பும் இருப்பது போல திரையில் காட்டப்படவில்லை.

ஆனால் உண்மை நிலை அதுவல்ல.என்பதாகத் தெரிகிறது. முகுந்தின் அம்மா ராணுவத்தில் மகன் சேருவதற்கு ஆதரவாகவே நின்றதாகச் சொல்லப்படுகிறது. உண்மைக் கதை என்று சொல்கிற பொழுது முழுவதுமாக உண்மைகளைச் சொல்ல என்ன தயக்கம் இருக்கிறது என்பது விளங்கவில்லை. தயாரிப்பாளர்களின் பின்னணி திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தை அளித்திருக்கிறது. இயக்குநர் இதனைத் தவிர்த்திருக்கலாம்.

நடிப்பில் சாய்பல்லவி வாழ்ந்திருக்கிறார். அதுபோலவே ராணுவம் வரும் காட்சிகளிலும் நடிப்பும் திரைக்கதையும் அசத்துகின்றன. சிவகார்த்திகேயனும் நன்றாகவே செய்திருக்கிறார்.



இதில் தேசத்திற்கு ஆதரவாகச் செயல்படும் பொதுமக்களை பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொல்வதைக் காட்டுகிறார்கள். அது உண்மைதான். அந்தப் பயத்தில்தான் பல பொதுமக்களும் தேசத்திற்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போலக் கூடுகிறார்கள்.

பொது மக்களில் ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தைகள் மரணிப்பதில் விருப்பம் இருக்குமா என்ன? அதுவும் பயங்கரவாதிகள் தங்களது வாரிசுகளை வெளிநாடுகளில் நன்றாக வாழவைத்துக் கொண்டு அப்பாவி மக்களின் குழந்தைகளை பயங்கரவாதகச் செயல்களில் ஈடுபடுத்துவதை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அளவற்ற சகிப்புத் தன்மையுடன்; என்றாவது தங்களுக்கும் இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

தமிழகத்திலும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதையும் சக மனிதர்களுடன் வேறுபட்டு நிற்பதையும் அவர்கள் விரும்பவில்லை. இதனை நான் களத்தில் கண்டு இருக்கிறேன். ஆனால் சுயநலத்துடன் இயங்கும் இயக்கங்களின் முன்னால் அவர்கள்.கையறு நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. தங்களது குழந்தைகளுக்கு வெறுப்பைப் போதிக்கும் அவர்களைத் தடுக்க இயலாமல் வேதனையில் தவிக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

சில குறைகளைத் தாண்டி இந்தத் திரைபபடம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருப்பதிலும் இயக்குநரின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும். ராணுவம் தொடர்பான திரைப்படங்களில் விஜய்காந்த் அர்ஜூன் துப்பாக்கி திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தாலும் அவற்றில் வசனங்கள் மிகுந்திருக்கும். காட்சி அமைப்புகள் செயற்கைத் தன்மையுடனும் நம்பகத்தன்மை அற்றும் இருக்கும்.

ஆனால் அமரன் திரைப்படத்தில் பல காட்சிகளும் தத்ரூபமாகவும் இயல்பாகவும் நம்பும்படியாகவும் அமைத்ததற்கு இயக்குநருக்கு வாழ்த்துகள். உண்மையில் திரைத்துறையில் நீண்ட காலம் கழித்து தேசப்பற்றுடன் ஒரு திரைப்படம் வந்துள்ளது.

உண்மையில் பல சமூகச் சிதைவுக்கும் பிரச்சினைகளுக்கும் கலாசார சீரழிவிற்கும் தமிழக திரைததுறைதான் அடித்தளமாக இருக்கிறது. அந்த இடத்திலிருந்து இப்படி ஒரு திரைப்படம் வருவதே பெரிய விஷயம்தான்.

தமிகத்தில் இருப்பவர்கள் இனியாவது நல்ல திரைப்படத்திற்கு மட்டும் ஆதரவு தர வேண்டும். கலாசார சீர்கேட்டுக் கருத்துகளுடன் வரும் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அந்தப் பணத்தில் இல்லாதோர்க்கு உதவுங்கள். பணத்தை வீணடித்து வீணர்களை வாழவைக்க வேண்டாம்.

அமரன் திரைப்படம் தேவையான காலத்தில் வெளிவந்து தனது அமரத்துவத்தை அடைந்து இருக்கிறது என்பதால் பாராட்டும் வாழ்த்துகளும்.





எல்லை காக்கும் தெய்வங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.உங்களால்தான் நாங்கள் வாழக்கையினை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

சனி, 23 நவம்பர், 2024

நரக(கர)மயமாக்கல்

எனக்குப் பயணம் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் இயற்கையின் வெளிறிய வனப்பு இருக்கும் கிராமத்து சாலைகள் கூட இதமான ஒன்றாக இருக்கும் பரபரப்பான நகரத்து சாலைகளில் செல்வதைக் காட்டிலும்.

அப்படித்தான் ஒருநாள் செங்கல்பட்டிலிருந்து கேளம்பாக்கம் செல்ல திருப்போரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தேன். இந்தச் சாலை வனப்பகுதியைக் கடப்பதால் இருபுறமும் இயற்கை பச்சைநிறத் தோரணத்தை அமைத்து இருக்கும்.

இடதுபுறம் மாம்பாக்கம்  செல்லும் சாலை வர அந்தக் கிராமத்து சாலைகளை நோக்கி வாகனத்தைத் திருப்பினேன். வனப்பகுதியில் மட்டும் மேடும் பள்ளமுமான சாலை. அதனைக் கடந்து கிராமத்து எல்லையை அடைந்ததும் சிறிய தார்ச்சாலையில் பயணம்.

இருபுறமும் நெற்வயல்கள். அந்த நெற்பயிர்கள் வேகமாக ஆடத்துவங்கின. அவை ஏதோ என்னிடம் கூற விழைவதைப் போல் இருக்க சற்று ஓரமாக நிறுத்திப் பார்த்தேன். இப்போது அவை எனது எதிர்திசைக்கு தலையைக் காட்டி மீண்டும் என்னை நோக்கி சாய்ந்தன. அவற்றின் தலை சென்ற திசையில் பார்த்தேன். தொலைதூரத்தில் கேளம்பாக்கத்தில் அமைந்த உயரமான கட்டிடங்கள்.

விவசாயியின் அறுவாள் அறுக்க வருகையில் கலங்காத இந்த நெற்பயிர்கள் இந்தக் கட்டிடங்களைப் பார்த்து நடுங்குகின்றன. விவசாயி அறுத்தாலும் தனது வம்சத்தை மீண்டும் மீண்டும் பெருகி தழைக்கச் செய்வான் என்பது அதற்குத் தெரியும் போல. ஆனால் இந்த கான்கிரீட் ராட்சசன் இரு கைகளையும் விரித்து பூமியையே விழுங்குவது போல வந்து கொண்டிருக்கிறான். அவன் நெருங்கி விட்டால் நெல் என்ன புல்லும் கூட முளைக்க இடம் தர மாட்டானே என்ற அச்சம் போல.


அச்சத்துடன் அவை வேகமாக மீண்டும் மீண்டும் சுழன்றாடின. வாடிய பயிரைக் கண்டு வாட நான் வள்ளலாரில்லையே. அவை பகிர்ந்த வருத்தத்தை என்னுள் வாங்கி நானும் வருந்தி மேலே வான் நோக்கி அவற்றிற்கும் எனக்கும் அறிவில் வித்தியாசம் வைத்தாய். ஆனால் என் இனம் அந்த பகுத்தறிவை கடவுள் மறுப்புக்கும் இன வெறுப்புக்கும் என்றாக்கி மற்றெதையும் சிந்திக்கக் கூட மறுத்து ஒதுங்கி நிற்கிறதே!! என்று இறையிடம் உனக்குக் கருணை மிகுதியாயிற்றே; ஏனிப்படி இதனை வேடிக்கைப் பார்க்கிறாய்; உனது கருணையை இவற்றின் மேல் காட்டக் கூடாதா என்றேன்

இறை மௌனமாய் இருந்தது எந்த பதிலுமளிக்காமல்; அது இயங்கியும் இயங்காமலும் நிலையாகவும் வினையினையும் விளைவினையும் வேடிக்கை பார்க்கும் ஒன்றல்லவா? எங்கோ பரவி விரவியுள்ள விவசாயிகள் விவசாயத்தின் பெருமையை பேசிக் கொண்டிருக்கிறார்.;விதைகளை சேகரிக்கிறார்;இயற்கையோடு உறவாடுகிறார்;பாரம்பரியத்தின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் நிலங்களை ஆக்கிரமிக்கும் ராவணன்கள்;இன்னொரு புறம் இயற்கையை பேணிக் காக்கும் ராமன்கள் என காலம் சுழன்று கொண்டு இருக்கிறது.

இன்னொரு நாள் வேலூரிலிருந்து சென்னை சாலையில் பயணித்துக் கொண்டு இருந்தேன். வாலாஜாபேட்டை சுங்கத்தை நெருங்குவதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள கிராமத்தில் ஒரு நெடிதுயர்ந்து நின்ற பாறை பாதியாக வெட்டப்பட்டு இருப்பதைக் கண்ணுற்றேன். அதிலிருந்து இரத்தம் போல் நீர் வடிந்து கொண்டு இருந்தது. இங்கிருந்து பார்க்கையில் கருரத்தம் மை பூசியது போல உறைந்து நிற்பதாக இருக்கும். மனது வலித்தது என்னுடைய இயலாமையை நினைத்து.

ஒரு விரல் புரட்சி என்பார்கள்; ஆனால் எனது ஒற்றை விரல் மட்டும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடக் கூடும். அந்த கிராமத்தில் உள்ளவர்களும் என்னைப் போன்ற மனிதர்கள்தானே? அவர்களுக்கு இது வலிக்கவில்லையா? அல்லது தினமும் அந்த சாலையில் கட்ந்து போகும் ஆயிரக்கணக்கானவர்களும் என்னைப் போன்ற இயலாமையை கொண்டவர்களா? அதில் ஒருவர் கூட ஊடகவியலாளராக இருக்க மாட்டாரா? அறச் சீற்றத்தோடு போராடும் மனத்திண்மை கொண்டவர் எவரும் இருக்க மாட்டாரா? அவர்களுக்கெல்லாம் இந்த ஒற்றைவிரல் புரட்சி பற்றித் தெரியாதா?

அது போல இன்னொரு முறை திருச்சியிலிருந்து திருவையாறு செல்லும் சாலை அதிக வாகனங்கள் செல்லாத காவிரியின் இன்னொரு கரையில் பயணம். கரூர் திருச்சி சாலையில் நெஞ்சில் கனத்துடனும் பயத்துடனும் பயணித்த பல நாட்கள்; காரணம் மணல் ஏற்றி அசுர வேகத்துடன் செல்லும் லாரிகள். ஆனால் இந்தப் பயணத்தில் இந்தக் கிராமத்துச் சாலைகளிலும் மணல் வண்டிகள் பகலிலும் வரிசையாகச் சென்று கொண்டு இருந்தன. தஞ்சை மண்டலம் பாதுகாப்பு மண்டலம் என்று போராடியவர்கள் எவருக்கும் இந்த அளவற்ற மணல் அள்ளுதல் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லையா?

இதுபோல கனிமவளங்கள் கொள்ளை


போவது ஒரு புறமென்றால் நகரமயமாக்கல் என்று ஒவ்வொரு பேரூராட்சியும் பக்கத்தில் உள்ள கிராமங்களை விழுங்கி நகரமாகிறது; நகரம் மாநகரமாகிறது; அது மேலும் மேலும் அருகமை கிராமங்களை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

காந்தி கிராம ஸ்வராஜ்யம், ராம ராஜ்யம் குறித்துப் பேசினார். ஜே சி குமரப்பாவின் வழி காந்தி சொன்ன கிராம பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த அனைத்துக் கருத்துகளும் ஆள்பவர்களுக்குத் தெரியாது அல்லது அதைக் குறித்துக் கவலைப்படத் தயாராக இல்லை. இப்படி கிராமங்களை நகரமாக்கி விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றி விட்டால் நகரத்தில் வாழும் மனிதனுக்கு உணவு எப்படித்தான் கிடைக்கும்?

ஒரு நகரத்தின் சுற்றளவு குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும்; அதனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட பரப்பளவிற்கு அந்த நகரத்திற்கு உணவளிக்க விளைநிலங்களும் கிராமங்களும் இருக்க வேண்டும். அவை என்றும் நகரமயமாக்கப்படாது என்ற உறுதியை ஆள்பவர்கள் ஏற்படுத்த வேண்டும்; அல்லது அவர்களை அதைச் சட்டமாக்க மக்கள் காந்திய வழியில்  போராட வேண்டும்.

கிராமங்கள்தான் இந்த தேசத்தின் உயிர்நாடி; மனிதர்களின் சுவாசக் குழாய், உணவுக் குழாய் எல்லாம். அவற்றின் இருப்பு மிக மிக அவசியம். இது சாத்தியப்பட வேண்டும் என்றால் கிராமங்களில் மக்கள் கட்சிகளைத் தாண்டி தங்களது கிராம நலனுக்காக இணைய வேண்டும். கிராமத்திலும், பேரூராட்சிகளிலும் கிராமத்தின் சார்பில் பேசக் கூடிய பிரதிநிதிகள் இருக்க வேண்டுமே அன்றி கட்சிகளின் விருப்பங்களை, ஆளும் வர்க்கத்தின் விருப்பங்களைச் செயல்படுத்தும் பிரதிநிதிகள் இருக்கக்கூடாது.

நேர்மையான, நியாயமான, கட்சி சார்பற்ற பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். குறிப்பாக இதுநாள் வரை பல பிழைகளுக்கு காரணமாகவும், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற துணையாகவும் இருந்தவர்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். கிராமங்கள் இதனை முன்னெடுத்தால் அன்றி அவர்களுக்கு வேறு வழி இல்லை.


எனது பங்காக நான் என்ன செய்வது என்ற கேள்வி எழ, இதனைப் பதிவதும், பகிர்வதும் என்று தோன்ற இதோ பதிந்து விட்டேன். என்னைப் போன்று வருத்தப்பட்ட ஜீவன்கள் சிலர் இருக்கக்கூடும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம். அறம் வெல்லும் என்ற எண்ணம் மிகுந்திருக்க வேண்டுகின்றேன்.

தர்மம் தோற்பது [போல இருக்கும். இறுதியில் அதுவே வெல்லும். அறம் மறவற்க; அறமே துணை.

வியாழன், 31 அக்டோபர், 2024

ஆலய தர்மம்

 சனாதன தர்மம் சிறக்க ஆன்மீக வளமும் ஆத்ம பலமும் பெற


மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவை எந்த கலப்படமுமில்லாத தூய்மையானதாகத் தேர்வு செய்து ஆலயங்களில் பயன்படுத்த வேண்டும்.

ஆலயங்களில் அதிகளவு மின்விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து எண்ணெய் வித்துகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்களை கலப்படமின்றி பயன்படுத்தி தீபங்களை ஏற்ற வேண்டும்.  குறிப்பாக கர்ப்ப கிருஹங்களில் மின்விளக்கு பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

பூமாலை என்பது வாழைநாரில் கட்டப்பெற்று ஸ்வாமிக்கு அளிப்பதே உத்தமமானது. மற்றவை ஏற்றதல்ல.

ஆலயத்திற்கு பூஜைப் பொருள்களை எடுத்துச் செல்ல நெகிழிப் பைகளை பயன்படுத்துதல் கேடானது.

ஆலயம் என்பது வியாபாரத்தலமல்ல அங்கு நாம் எதனையும் விலை கொடுத்து வாங்குவது நமக்கு நன்மை அளிக்காது.

பிரசாதம் என்பது கர்ப்பகிருஹத்தில் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்டவை, அணிவிக்கப்பட்ட பூ மாலைகள் விபூதி குங்குமம் தீர்த்தம் இவை மட்டுமே. பிரசாதம் என்பது விற்கப்படவும் கூடாது.

ஆலயங்கள் நமக்கு இறைசக்தியை அளித்து நமக்கு ஆத்மபலத்தை அளிக்கவே ஏற்பட்டவை. அங்கு நாம் அமைதியாக இருந்தால் மட்டுமே இறையனுபூதியை உணரவும் பெறவும் இயலும்.

எந்த இறைத்தலமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை பிரவாகிக்க குறிப்பிட்ட ஆகம முறைப்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆகமத்திற்கு உட்படாத புதிய சந்நிதிகள், கட்டிடங்கள் இவை அந்த ஆற்றலை நாம் பெற இயலாமல் செய்துவிடும்.

ஆன்மீகம் என்பது இலகுவான ஒன்றல்ல. அதனை அடைய மனமும் உடலும் பக்குவப்பட வேண்டும். பக்தர்களுக்கு வசதிகள் என்ற பெயரில் செய்யப்படும் அனைத்தும் இதனை சிதைத்து விடும்.

மலைக் கோவில்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். விஞ்ச் ரோப்கார் இவை அனைத்துமே நமது ஆன்மீக பயணத்திற்கான தடைக்கற்கள்.

வசதிகள் ஆன்மீகத் தலங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விடுகின்றன. ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோர் இந்த வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.

தல யாத்திரை ஒவ்வொரு மாதமும் நிழ்த்த வேண்டிய ஒன்றல்ல. எந்த மகானும் ஒரே கோவிலுக்கு மீண்டும் மீண்டும் சென்றதில்லை;உள்ளூர் கோவிலை புறக்கணித்ததுமில்லை. மாதா மாதம் நான் திருப்பதி சென்றுவிடுவேன் என்பது அகங்காரத்தை அளிக்குமே ஆன்றி அனுபூதியை அல்ல.

நாம் தினமும் செல்வது உள்ளூர் கோவிலாக இருக்கட்டும். அங்கு  ஆகமப்படி அனைத்தும் நடப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதைச் சரியாகச் செய்தால் ஆங்காங்கு பரவிக் கிடக்கும் பல இறைச் சக்திகளும் அருளும் கூட நமக்குக் கிட்டும்.

வருடத்தில் ஒரு முறை தலயாத்திரை மேற்கொள்ளலாம். சென்ற கோவிலுக்கே செல்லாமல் புதிய ஆலயங்களுக்குச் செல்வது சாலச் சிறந்தது.

பொருள்  வேண்டி பயணிப்பதும் இறைவனிடம் பேரம் பேசுவதும் பாவத்தைச் சேர்க்கும் செயலாகும். அருள் வேண்டியே ஆலயம் நோக்கிய பயணம் இருக்க வேண்டும்.

சபரிமலை போன்ற இடங்களுக்குச் செல்கையில் அதற்கான விரதத்தை முழுமையாகக் கடைபிடிக்காமல் செல்வது பயனற்றது என்பதோடு பாவத்தைச் சேர்க்கும். அந்த விரதத்தை அடுத்தவருக்கு சரியாக சொல்லாமல் விடுத்து அவரையும் தவறான பாதையில் பயணிக்கச் செய்வது கூடுதல் பாவத்தைச் சேர்க்கும். சபரிமலை யாத்திரை சுற்றுலா அல்ல என்ற எண்ணத்தோடு செயல்படுவது மட்டுமே அதற்கான பலனை அளிக்கும்.

ஆலயங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அங்கு அமர்ந்து உண்பது சரியல்ல. அங்கு குப்பைகளைப் போடுவது சத்தமாகப் பேசுவது இவை அனைத்தும் பாபத்தைச் சேர்க்கும் செயல். உண்பதே சரியல்ல என்கிற பொழுது அங்கு இயற்கை உபாதைகளைக் கழிப்பது எவ்வளவு தவறான செயல்.

ஆன்மீகம் இலகுவானது அல்ல. நெருப்பினைப் பயன்படுத்துவது போல. சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பாதிப்பு நமக்குத்தான்.

உள்ளம் பெருங்கோவில்; ஊனுடம்பு ஆலயம் என்ற நிலையினைப் பெற ஆலய யாத்திரை கவனத்துடனும் கூடுதல் அக்கறையுடனும் ஆன்மீக நாட்டத்தோடு செய்யப்பட வேண்டும்.

விரைவு தரிசனம் பெற காசு கொடுத்துப் போவதும் சிறப்புக் கட்டணங்களில் தரிசனம் பெறுவதும் ஆலயத்தின் நேர்மறை சக்திகளை நாம் பெறுவதைத் தடுத்துவிடும். அதனைத் தவிர்த்துவிடுவது சாலச் சிறந்தது.

இறை தரிசனத்திற்காக நாம ஜபத்துடன் காத்திருப்பது நமது ஆன்மீகத்தை உயர்த்தும் செயலாக அமையும். ஆத்ம பலத்தைப் பெருக்கும்.

தல யாத்திரைகளில் அதிக ஆலயங்களுக்குத் திட்டமிடுதலைத் தவிர்க்கலாம். தல யாத்திரையாக ஒரு ஆலயத்திற்குச் சென்றால் அங்கு முழுநாளும் இருத்தல் சிறப்பு.

ஆன்மீக விதிகளைச் சரியாகவும் முறையாகவும் பக்தர்களுக்குச் சொல்லி அவற்றைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் இவர்களுக்கு உண்டு. ஆகமப்படி அனைத்தையும் ஆலயத்தில் நிகழ்த்த வேண்டிய கடமையும் இவர்களுக்கு உண்டு. இவற்றிலிருந்து இவர்கள் விலகினால் கூடுதலான பாபத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்.

ஒரு ஆலயத்தில் ஆகம மீறல் நடக்கிறது என்றால் அந்தக் கோவில் அர்ச்சகர்கள் ஸ்தானீகர்கள் அறங்காவலர்கள் அந்தக் கோவிலைச் சார்ந்த மடாதிபதிகள் ஜீயர்கள் உள்ளூர் மக்கள் என அனைவருக்கும் அவரவருக்கு விதித்தபடி பாபம் சேரும் என்பது சத்தியமான ஒன்று.







வெள்ளி, 18 அக்டோபர், 2024

 வேட்டை மற்றும்  தேடுதலில் உள்ள சங்கடங்களைத் தவிர்க்க தான் வசிக்கும் இடத்திலேயே தனக்கான உணவினை உருவாக்க முனைந்ததுதான் விவசாயத்தின் அடிப்படை.  

இன்று விவசாயம் ஒரு தொழிற்சாலை போல மாறி நிற்பது அதன் வீழ்ச்சியா வெற்றியா என்ற புரிதலில் பலருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதென்னவோ உண்மைதான். பெரும்பான்மை சமூகம் இதை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

மனிதன் தனக்கான உணவைத் தன்னருகே உருவாக்க முனைந்த காலை, அதனை இயற்கையின் போக்கிலேயே தான் கண்டறிந்த விதத்தில் முயற்சித்து திருப்தி கொண்டான். அவன் இயற்கை அளித்ததை எடுத்துக் கொண்டானன்றி அதன் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தவில்லை. 

அதில் உற்பத்தி அதிகரிக்க தேவைக்கு மிஞ்சியது பகிரப்பட்டு பின்னாளில் பண்டமாற்று என்றாகி பின் பணத்திற்கு மாற்று.என்றாகி இன்று தேவைக்கானது என்ற நிலை மாறி உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை ஆகி நிற்கிறது. 

இடைப்பட்ட காலத்தில் கூட வேலையாட்களின் கூலி, இயற்கை உரத்தின் விலை விதையின் விலை என அனைத்தும் ஓரளவுக்கு விவசாயியால் கையாள முடிந்தது. உற்பத்தி பொருள் மற்றும் பணத்திற்கான மதிப்பு ஒவ்வொன்றிற்கும் வேறுபாடாய் இருக்க இன்று விளைச்சலுக்குப் பிறகு திண்டாட்டத்திற்கு தள்ளப்படுகிறார் ஒவ்வொரு விவசாயியும். 

முன்னால் என்ன பயிரிட வேண்டும் எப்பொழுது என்பது முதல் விதை உரம் என அனைத்தும் விவசாயியின் திட்டமாக இருந்தது. இன்று அனைத்தும் யாரிடம் இருந்து உருவாகிறது எனத் தெரியவில்லை ஆனால் அவை விவசாயியின் அனுபவத்தைச் சார்ந்ததாக அமைய இயலாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

இன்று இயற்கை விவசாயம் என்ற பெயரில் நுகர்வோர் மீது அதீத விலை உயர்வை  திணிக்கிறார்கள். நாட்டு மாட்டுப் பால் நாற்பது ரூபாய் விற்றது இன்று ₹100 லிருந்து ₹120 ரூபாய். மிகக்குறைந்த விலையில் கிடைத்த நாட்டு பசுக்கள் இன்று லட்சக்கணக்கில் விலை உயர்ந்திருக்கிறது. பணம் இருப்பவருக்குத்தான் நாட்டு மாட்டு வளர்ப்பும் அதன் பயனும் என்ற எண்ணத்தில் செயல்படுவதை சமூக அக்கறை என்று சொல்லப்படுவது நகைப்புக்குரியது. 

இதனைச் செய்பவர்கள் பெரும்பான்மையோர் ஏழைகள் குறித்து அதீதக் கவலையோடு பேசுபவர்கள். பணக்காரருக்கு கிடைக்கும் அனைத்தும் ஏழைக்கும் கிடைக்க வேண்டும் என்ற நீதி பேசுபவர்கள். ஆனால் செயலில் மாறுபட்டு நிற்பவர்கள். 

சிலர் தற்சார்பு என்று பேசுகிறார்கள். ஆனால் இது கம்யூனிஸத்தின் தனிமனித உரிமை என்ற இடத்திலிருந்து உருவாகி நிற்கிறது "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்ற இந்திய சிந்தனைத் தளத்தில் இருந்து அல்ல. தனி மனித உரிமை தனி மனித தேவை சார்ந்த அனைத்தும் சமூகத்தில் நல்லனவற்றை உருவாக்காது. 

சமூகத்தின் நன்மைக்காக உருவாக்கப்படும் திட்டங்கள் மற்றும் முனைப்புகளும் மட்டுமே ஆக்கபூர்வமான அமைதியான சமூகத்தினை உருவாக்கும் நிலைக்கு நகர்த்தும்.  தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவினை அளிக்க வேண்டிய கடமை இந்த உலக மக்களுக்கு இருக்கிறது என்பதால்தான் அந்த வரிகள் பாரதியின் சிந்தனையிலிருந்து உதித்தெழுந்தது. 

இன்று உற்பத்தி சார்ந்து இயங்கும் விவசாயத்தை முழுவதுமாக தன் தேவைக்கு என்று நகர்த்துவது கொலை பாதகமாகும். ஏனெனில் உற்பத்தி திறனற்று நிற்கும் மனிதர்களின் உணவுத் தேவையினை இது பாதிக்கும். அனைவருக்கும் அதிக பணம் கொடுத்து உணவினை வாங்க இயலாத சூழலில் இருக்க இது ஆபத்தானதாகும். 

தற்சார்பு என்பது ஒரு கிராம அளவில் துவங்கி மாவட்டம் மாநிலம் தேசம் என அனைத்து சமூகத்தினையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். தனிமனிதனின் தற்சார்பு எண்ணம் ஒட்டு மொத்த தேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமையுமாறு இருக்க வேண்டுமே அன்றி தன்னலத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இருக்கக்கூடாது. 

தண்ணீர் காற்று உணவு இவை அனைத்தும் அனைத்து மனிதர்க்குமான அடிப்படைத் தேவை. நமது முனைப்புகள் அனைவர்க்கும் இவை சுத்தமானதாகவும் தரமாகவும் கிடைப்பதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். 

நாம் பல்லாயிரம் மைல் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறோம். இது உகந்தது அல்ல. உடனே நிறுத்துவது பேராபத்து. நமது வேகத்தினை முதலில் குறைக்க வேண்டும். 

விவசாயம் என்பது நமது உணவுத் தேவைக்கு மற்றும் உபரி மற்றவர்க்கானது. இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. உழைப்பு மட்டுமே நாம் கொடுப்பது. உழைப்பும் நமக்கு உடல் நலன் என்ற ஒன்றை ஈந்து விடுகிறது. 

நமது குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் நமது கிராமத்திற்குள்ளாக இருந்தே பெற முயற்சிக்க வேண்டும். நிலம் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒற்றைப் பயிர் என்ற முறையிலிருந்து முழுமையாக கலப்பினப் பயிருக்கு மாறாவிட்டாலும் சிறிது பகுதியையாவது தனது குடும்பத்திற்கு தேவையானவற்றை பயிரிட முனைய வேண்டும். 

புளி, பருப்பு, எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் , நெல், சிறுதானியங்கள் என தனது அனைத்து தேவைகளையும் ஒரு கிராமம் நிறைவு செய்து கொள்ள முயல வேண்டும். உபரியினை பக்கத்து கிராமங்கள் நகரங்களுக்கு பகிர முனையலாம். இங்கு பகிர என்பது இலவசமாக அல்ல அதே நேரத்தில் எங்கோ தொலை நகரத்தில் வியாபாரி நிர்ணயிக்கும் அதீத விலைக்கும் அல்ல. 

நமது ஆடைத் தேவைகளை அருகில் வாழும் சிறு நெசவாளிகளிடமே பெற முனையலாம.  நமது விவசாயக் கருவிகளை அருகில் உள்ள சிறு தொழில் முனைவோரிடமிருந்து பெறலாம். பெருந்தொழில் நிறுவனங்கள் சில பொருள்களை உற்பத்தி செய்வதற்காகத் தேவை. ஆனால் நமது அனைத்துத் தேவைகளுக்கும் அவற்றைச் சார்ந்திருப்பது என்பது சரியானதல்ல. 

நமது ஊரில் மழை பெய்கிறது. தோட்டத்துக் கிணறு நிறைந்தால் அந்த உபரிநீர் வெளிப்போந்து மழைநீர் வடிகால்வாய் வழியாக நமது ஊர் குட்டை குளங்களை நோக்கிச் செல்லும். அதுவும் நிரம்பினால் அங்கிருந்து நீர் வெளியேறி பெருங்கால்வாய்களை அடைந்து பக்கத்து கிராமத்து ஏரி குளங்களை நோக்கி நகரும். பின் கடைசியாக அருகிலுள்ள சிற்றாற்றினில் கலந்துவிடும். 

எங்கோ மலையுச்சியினில் விழும் மழைநீர் அருவியாகி பின் ஆறாகி பெருகி ஓடும். அதன் நீர் கிளைக் கால்வாய்கள் வழி பல கிராமத்து ஏரிகளை வரிசையாக நிரப்பும். உபரிநீர் மட்டுமே அடுத்தடுத்த நீர்நிலைகளை நோக்கி நகரும். பின் மீண்டும் அதே ஆற்றிலோ அல்லது வேறு எங்கோ சென்று கடலினை அடைந்து விடும். இயற்கையின் இந்த சுழற்சி இயல்பாய் நிறைந்தேறும் மனிதன் சரியாக ஏரி கால்வாய்களை சுத்தம் செய்து சரியாக பராமரித்து வரும்பொழுது மட்டுமே. 

ஏரியில் நிரம்பிய தண்ணீர் கூட குறுங்கால்வாய்கள் வழியாக அனைத்து நன்செய்நிலங்களையும் சென்றடையும். இன்று மனிதன் தனியுரிமை என்றுகுறுக்கிக் கொண்டதால் கால்வாய்கள் குறுகின. நீர்நிலைகள் அருகின. 

இயற்கையின் இந்த நீர்சுழற்சியே நிலத்தடி நீரை நல்ல அளவில் பராமரித்து வரும். பேராசை மனதினை ஆக்கிரமிக்க கால்வாய் நீர்நிலைகளை மனிதன் ஆக்கிரமிக்க இந்த சுழற்சி தடைபட்டது. பின்னர் ஆழ்துளைக் கிணறிட்டு பாலுக்கு மேலாக ரத்தத்தை உறிஞ்சுவதைப் போல நிலத்தின் ரத்தத்தையும் உறிஞ்சும் வல்லசுரராய் மாறி நிற்கிறோம். 

நீரும் நிலவளமும் நமது நமக்கென்ன என்ற பொறுப்பற்ற தன்மையினால் நாளும் சுரண்டப்படுகிறது. கொள்ளையடிக்கப்படுகிறது. இந்தக் கடமை விவசாயிகளிடத்து இருக்கிறது. வளங்களைக் காத்து நீர் சுழற்சியைப் போல வளச்சுழற்சியை உருவாக்கி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி கிராமங்களை கிராமமாய் உயிர்ப்புடன் வாழவைக்க அவர்களால் மட்டுமே முடியும். 

ஒவ்வொரு கிராம விவசாயிகளும் இணைந்து தங்களது விவசாய நிலவளத்தையும், நீர்நிலைகளையும் போற்றிப் பாதுகாக்க முற்பட வேண்டும். தங்களுக்கான விவசாயப் பயிர்களை காலம், மண்ணின் தன்மை அறிந்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கிராமத் தற்சார்பினை நோக்கி நகர வேண்டும். 

கிராமத்தில் வாழும் எந்த ஒரு ஜீவனும் ரேஷன் அரிசிக்காக கையேந்தி நிற்காமல் உங்களுடன் இணைந்து உழைத்து தங்களுக்கான உணவினைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

உபரியான உற்பத்தி மட்டுமே ஏற்றுமதிக்கு என்ற எண்ணமும் உற்பத்தி தனக்கும் தனது ஊருக்கு மாவட்டத்துக்கு மாநிலத்துக்கு என்ற எண்ணம் நமக்குள் உறுதியாய் நிற்க வேண்டும். பணத்துக்காக அல்ல வாழ்வதற்காகவே உணவு. 

 அனைவரும் இணைந்து இதனை முன்னெடுக்கையில் நமக்கான தேவைகள் நம்மிடமே உற்பத்தியாகும். வெளியிலிருந்து பெறுவது குறையும். நிச்சயம் பொருளாதாரம் உயரும். ஏனெனில் நிச்சயம் உபரி இருக்கும். உபரி இல்லை என்றாலும் கிராமத்திலுள்ள எவரும் வெளியே  கையேந்தாத நிலை உருவாகும். உருவாக்க வேண்டும். 

இந்தத் தேசம் வல்லரசாக வேண்டுமெனில் ஒவ்வொரு கிராமமும் தற்சார்பு பெற வேண்டும். குறுதொழில்களைச் செய்ய இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் வாயிலாக ஒரு தாலுகாவின் தேவையை பூர்த்தி செய்யலாம். 

நான் எழுதியதில் பிழை இருக்கக்கூடும். எனது நோக்கத்தில் இல்லை.  அனைத்துக் கிராமத்திற்கும் ஒரு பொது மாடல் இருக்க இயலாது. ஒவ்வொரு கிராமமும் அதற்கான தற்சார்பு முறையை நோக்கி நகர்கையில் வேறொரு கிராமத்துடன் கைகோர்த்துக் கொண்டால் சாத்தியக்கூறுகளின் சதவிகிதம் அதிகமாகக் கூடும்.

வெள்ளி, 28 ஜூன், 2024

 சமூக மேம்பாடு என்பதும் ஒரு சமூகத்தின் கலாசார பண்பாட்டு நாகரீகத்தின் புத்தாக்க வளர்ச்சி என்பதும் வேறல்ல என்றே கருதுகின்றேன். இந்த வளர்சி என்பது பரிணாம முறையில் ஏற்படும்பொழுது மட்டுமே அந்த வளர்ச்சி நிரந்தரமானதாக அமையக்கூடும். சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என இங்கு குறிப்பிடுவது ஒரு சமூகம் தனது பண்பாடு கலாசாரத்தின் வழியாக அதனுடனே உறவாடி கால மாற்றங்களுக்கு ஏற்ப அடிப்படை அறத்தினை தளமாகக் கொண்டு உருவாகி மேலெழும்பி வரவேண்டும்.

பாரத சமூகத்தில் தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வரையறைக்குள் அடைக்கப்பட்ட ஒன்று. அந்த சுதந்திரத்தின் நீட்சி அடுத்தவரின் மூக்கினை தொட்டுவிடாமல் இருக்க வேண்டும். முதலில் அந்த சுதந்திரம் குடும்பம், அதற்கடுத்ததாக உறவு, அடுத்ததாக நட்பு, அடுத்ததாக ஒட்டு மொத்த சமூகம், இவற்றின் பண்பாடு, கலாசாரம், இவை அனைத்தையும் தாங்கி நிற்கும் தேசத்தின் பாதுகாப்பு என அனைத்தையும் மீறாமல் இயங்கிக் கொள்ளுமாறான வரையறைக்குள் இருந்தது.
என்று தனிமனித சுதந்திரம் என்ற விஷ விதை இங்கு விதைக்கப்பட்டதோ அன்றே குடும்பம் என்ற கட்டமைப்பு சிதையத் துவங்கியது. பின்னர் உறவுகளுக்குள் விரிசல் அது சமூகத்தில் அடுத்ததாக நுழைந்துவிட்டது.
இன்று எந்த அறமீறலும் அறுவெறுப்புடன் பார்க்கப்படாமல் தனிமனித சுதந்திரம் என்ற அகங்காரத்துடன் வலம் வருகிறது. இதனை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்த இயலாது. இந்தச் சமூகத்தில் அறத்தின் மீதான காதலும் மதிப்பு மரியாதை பயம் என்றிருந்ததெல்லாம் இறைநம்பிக்கையுடன் இணைக்கப்பட்டும் இருந்தது.
கல், மரம், நீர், நெருப்பு, காற்று, வானம், மலை என்று தன்னைச் சுற்றி நின்றிருந்த இயற்கை அனைத்திலும் இறையைக் கண்ட பழங்குடி மரபே அத்வைத தத்துவ சிந்தனையாக வளர்ந்தெழுந்திருக்கக்கூடும். அந்நிய ஆக்கிரமிப்பு நிலத்தை சுதந்திரம் என மீட்டெடுத்து 75 வருடங்கள் கடந்திருக்கலாம். இன்னமும் அந்நிய சிந்தனையும் தத்துவமும், கல்வி முறையும் நமக்குள் தொடர்ந்து திணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இதன் தாக்கமே நீரை வணங்கியவன் அதனை அசுத்தம் செய்யத் தயங்கவில்லை, விற்கவும் தயங்கவில்லை. மண்ணைத் தெய்வமாக நினைத்து செருப்புக் காலோடு விவசாய பூமியை மிதிக்காதவன் இன்று மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறான். மலைகளைத் தெய்வமாக வணங்கியவன் குவாரி என்ற பெயரில் அதனை அழித்தொழிக்கிறான். மரத்தை வணங்கியவன் அதனை மூடநம்பிக்கை என்று சொன்னவன் பின்னால் சென்று காணும் மரத்தை யெல்லாம் வெட்டி விற்று விடுகின்றான்.
இயற்கையை வணங்கியதை மூடநம்பிக்கை என்ற சிந்தனை இங்கு விதைக்கப்பட்ட பிறகு அதனை ஏற்றுக் கொண்டபின் கனிம வளக் கொள்ளையைச் செய்பவனுக்கு சனாதனஅறம் என்று இந்த மண் வழங்கிய அறம் அனைத்தும் மூடநம்பிக்கையாகத்தானே தெரியும். அதைச் செய்வது பிழை என்று எப்படிக் கருதுவான்.
இப்படி நாற்புறமும் தாக்கப்பட்டு தான் யார் தனது பண்பாடு பாரம்பரியம் எது என்று புரியாமல் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் திணிக்கும் தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய சிந்தனைக்கும் தனது முன்னோர் வழங்கிய சமூக சுதந்திரத்தை பிரதானமாகக் கொண்ட பாரத சிந்தனைக்கும் இடையில் தடுமாறிக் கொண்டு இருக்கும் ஒரு சமூகம் தன்னை எப்படி முன்னெடுத்துச் செல்ல இயலும்?
வாழ்க்கையை போராட்டக் களம் என்று சொல்லித் தருவது மேற்கத்திய சிந்தனை. அது போராட்டக் களமல்ல தனது வாழ்க்கை அதனை எதிர்கொள்ளப் பழக வேண்டும் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும் அதிலிருந்து தன்னையும் தனது உறவையும் சமூகத்தையும் அரவணைத்துக் காத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் நமது பாரம்பரியச் சிந்தனை.
இங்கு முதலில் மீட்டெடுக்கப்பட வேண்டியது குடும்ப அமைப்பு. பின்னதாக ஒரு ஊர் என்ற கிராமம் என்கிற ஒரு சமூகக் கட்டமைப்பு. இங்கு தன்னலம் சுயநலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பொதுநலமான சமூகநலன் முன்னிறுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சியும் நலனும் அது அந்தக் கிராமத்தின் ஒரு தனிமனிதரின் அரசியல் கட்சி என்பதிலிருந்து விலகி அந்த ஊரின் நலனுக்காக என்று நிற்கிற நிலை வேண்டும். கேரளாவை அடிக்கடி இந்த விஷயத்திற்காகச் சுட்டிக் காட்டுவார்கள். அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் மத்திய அரசினை தங்களது மாநில நலனுக்காக ஒற்றுமையாக அணுகுவார்கள் என்று.
ஊராட்சிகள், பஞ்சாயத்துக்கள் அரசியல் சார்புள்ளவர்களைத் தேர்வு செய்வதிலிருந்து விலகி கிராமத்தின் மற்றும் சமூக நலத்தின் மீது அக்கறை கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும் நிலை வரவேண்டும். ஒழுக்கமுள்ளவர்களையும் அறத்தினை வாழ்வியலாகக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாக கிராம மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
மக்கள் போராட வேண்டாம். பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதில் சரியான பங்களிப்பை அளித்துவிட்டாலே அந்த கிராம நலன் பாதுகாக்கப்படும். சமூகநலனும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
இன்று மக்களின் சுகாதாரம் என்பது மருந்து சந்தையின் கைகளில், மக்களின் கல்வி என்பது கல்வித் தொழிற்சாலைகளின் கைகளில், உணவு என்பது உணவுச் சந்தையின் கைகளில் உள்ளது.
நமது மரபில் இந்த மூன்றுமே விற்பனைக்கு என்று இருந்ததில்லை. மருத்துவர் தனது மருத்துவத்தை விற்பனை செய்ததில்லை, குருகுலங்களோ, தனியாசிரியர்களோ மாணவர்களுக்கு கல்வியை விற்றதில்லை மற்றவர்க்கு உணவளிப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கடமையாகவே இருந்தது. இந்த அற எண்ணங்களினால் மருத்துவரையும் ஆசிரியரையும் சமூகம் பாதுகாக்கும் பொறுப்பினை தான் ஏற்றுக் கொண்டது. இன்று அந்த அறத்தினைக் கைவிட்டு மேற்கத்திய சிந்தனையில் இயங்கி வருவதுதான் மக்களுக்கு ஏற்பட்ட சோதனை.
மது உண்பது, சூதாடுவது, மாற்றான் மனைவியை அடைய நினைப்பது( மணம் கடந்த உறவு), ஊழல் புரிந்து கொள்ளை அடிப்பது, அடுத்தவர் சொத்தை அதிகாரத்தாலோ பலத்தாலோ அபகரிப்பது, பொதுச் சொத்தை, கோவில் சொத்தை தனதாக்கிக் கொள்வது இவையெல்லாம் அற மீறல்களாக கீழ்மையான செயல்களாக ஒருகாலத்தில் இந்த சமூகத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று இவை தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் அகங்காரத்துடன் நகர்வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவர்கள்தான் விஐபிக்கள்.
இந்தத் தேசம் வல்லரசாக வேண்டும் என்றாலும், மக்கள் அனைவரும் நலத்தினைப் பெற வேண்டும் என்றாலும் மக்களின் சிந்தனை முறை மாற வேண்டும். அதற்கு கல்வி முறை மாற வேண்டும். நமது சிந்தனை வழியாகக் கற்றலையும், நமது மண்ணின் அறங்களையும், தமிழ் இலக்கியங்களையும் கற்றுணரும் வகையில் மாற்றப்பட வேண்டும். கல்வி என்பது வேலை வாய்ப்புக்கானது அல்ல; அது வாழ்வியலுக்கானது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
நமது வேரான பாரம்பரியத்தையும், அறத்தையும், கலாசாரத்தையும், மருத்துவத்தையும், மீட்டெடுக்காமல் போராட்டங்களாலும் சட்டங்களாலும் எதையும் மாற்றி அமைக்க இயலாது. ஒரு சமூகத்துக்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் உண்டு. அதற்கான சிந்தனையையும் சூழலையும் உருவாக்க வேண்டியதுதான் இன்றையத் தேவை.
சு. சத்திய நாராயணன்
28.06.2024