வெள்ளி, 27 டிசம்பர், 2024

நற்குடும்பமே நல்ல சமூகத்திற்கு விதை

 ஆசிரியர்களை விட பெண்கள்தான் எதிர்கால சமூகத்துக்கு மிகப் பெரும் சொத்து. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நமது மரபில் கொண்டாடப்படும் வரிசை. ஒரு குழந்தையின் வாழ்வியல் சரியான பாதையில் செல்வதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுப்பவள் தாய்.

பின்னர் பிதா குரு என்பவர்களால் சரியாக வழிகாட்டப்பட்டு தெய்வத்தை உணர்ந்து கொள்கிறது ஒரு குழந்தை. அப்படி ஒருவரின் வாழ்வியலை உருவாக்கும் பெண், தாரம், மாமியார்,மருமகள் எனப் பல்வேறு பெயர் கொண்ட உறவு முறைகளில் ஒரு குடும்பத்தின் வாழ்வியலை கட்டிக் காத்து சரி செய்து அதன் ஒழுங்கமைவில் எந்தச் சிதைவும் ஏற்படாமல் கண்காணித்துப் பாதுகாக்கிறாள்.
இதனால்தான் பெண்ணைப் போற்றி வணங்கும் முறை இந்த மண்ணில் இருக்கிறது. மலையையும் நதியையும் தாயாய் வணங்குகிறோம், இந்த மண்ணினைத் தாயாய் வணங்குகிறோம். மலையிலும் நதியிலும் மண்ணிலும் அதன் தாய்மை குணத்தைக் கண்டு வணங்குகிறோம்.
ஆணின் பந்தாவான வீரப் பேச்செல்லாம் வெளியில் மட்டும்தான். ஒரு தாயிடமும் தாரத்திடமும் அவன் தன்னை தாழ்த்திக் கொள்கிறான். அதனைக் கேலிப் பொருளாக்கி சமூகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கினாலும் அவர்களும் தாரத்தின் முன்னர் சரணென நின்றிருப்பவராகத்தான் இருப்பர். இதில் இழிவொன்றும் என்றும் இல்லை.
ஏனெனில் பெண்ணின் ஆதிக்கம் ஓங்கி நிற்பதும் அது வாஞ்சையாய் வணங்கி நிற்பதும் கொஞ்சிப் பேசுவது என எதை எடுத்துக் கொண்டாலும் அதன் நோக்கம் குடும்ப நலனும் நல்ல வாழ்வியலும் என்பதாக மட்டுமே இருக்கும்.
மனமொத்து மணந்த இருவரோ மனமொத்த குடும்பங்கள் இணைத்த இருவரோ இணைந்து உருவாக்கும் குடும்பங்கள் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். வாழ்வில் நிலைத்து நிற்பது பணம் என்பதனை முன்னிறுத்தி தொழில் வேலை பிறகு திருமணம் என்று வரும் இடங்களில் பெரும்பாலும் தனித்துவம், தனிமனித உரிமை, எனக்கானது என்று பேசுகிற இடத்தில் குடும்பம் வாழ்வியல் என்பன பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன.
வாழ்வியல் என்பதில் நமது அறத்திற்கு முன்னுரிமை இருக்க வேண்டும். அறம் சார்ந்த வாழ்வியல் என்பது நமது பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்த செயல்களாக இருக்கிறது. அந்த அறத்தில் தனி மனிதனை விட குடும்பம், உறவு, சமூகம் என ஒட்டு மொத்த மனிதனுக்கும் ஆண், பெண் பேதமற்று கிடைக்கும் உரிமையும் நலனுமன்றி தனிமனிதர் சார்ந்து மட்டுமான உரிமையும் நலனும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும்.
ஆனால் இன்றைய இளைய சந்ததிக்குப் போதிக்கப்படுவதெல்லாம் இந்த ஒட்டுமொத்த நலனை முன்னிறுத்துகிற பாரம்பரியம் மூட நம்பிக்கை, பழம் பஞ்சாங்கம், பட்டிக்காடு என்று சொல்லப்பட்டு அது ஏதோ இழிவான ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது. மரபுகளைச் சிதைப்பதும், அழிப்பதும் மட்டுமே மூடநம்பிக்கை அற்றது முற்போக்கு சிந்தனை என்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது.
தன் நலத்தை மட்டுமே முன்னிறுத்துகிற ஒரு ஆணிடம் நீங்கள் பெண்ணின் பாதுகாப்பினை எப்படி எதிர்நோக்க இயலும். நான் விரும்புகிறேன் எனக்கு அது வேண்டும் அதனை எப்படியேனும் பெறவேண்டும் என்ற மூர்க்கத்தனம் ஊறி நிற்கிற ஒரு ஆண் சமூகத்துக்கு தீங்கானவன். எனக்குக் குடும்பத்தை விட எனது விருப்பம் மட்டுமே முதன்மையானது என்கிற பெண்ணால் குடும்பத்தின், சமூகத்தின் நலனை நினைத்து அதனை முன்னிறுத்திச் செயல்படும் குழந்தையை உருவாக்க இயலும்.
நமது சமூகம் பாதுகாப்பாகவும் மகிழ்வோடும் இருக்க வேண்டும் என்றால் அதன் மீது அக்கறை கொண்டவர்கள் உருவாக வேண்டும். அதற்கு நமது மண்ணின் அறம் சார்ந்து இயங்கக் கூடிய குடும்ப அமைப்பு முறை வலுப்பெற வேண்டும்.
காலத்திற்கேற்ப நமது குடும்ப அமைப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அதனைச் சிதைக்கிற முறையில் மேற்கத்திய கலாசார முறைகளை தமது குடும்பத்தில் செயல்படுத்துபவர்களும், அதனை ஆதரித்து எழுதுபவர்களும்தான் இன்றைய நவீன சமூக விரோதிகள் என்பதனை நாம் அடையாளம் காண வேண்டும்.
ஆணோ பெண்ணோ கோழையாய் இருப்பதால் என்ன பயன். ஒரு ஆணோ பெண்ணோ கோழையினை மணம் முடிப்பதால் என்ன பயன். ஆபத்து வருகையில் உடன் நின்று ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயலாத ஒரு ஆணைக் காதலிப்பதோ கரம் பிடிப்பதோ பெண்ணுக்கு ஏற்றதல்ல. அதற்காக முரடனையும் ரவுடியையும் தேடிப் பிடித்து மணம் புரிவது பிழையாகும். சினிமாவில் இப்படி முரடனையும் ரவுடியையும் பெண் விரும்பிக் காதலிப்பதாகக் காட்டுகிறார்கள். இது சிந்தனைத் திணிப்பு.
சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நமது பாரம்பரிய அறத்தை விட மேற்கத்திய சிந்தனைகளையும் அறத்திற்கு மாறான சுயநலச் செயல்களையும் சரி என்பது போலக் காட்டுகிறார்கள். பொது நலத்தை விட சுயநலமே சிறந்தது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அறமற்ற சிந்தனையை இந்த ஊடகம் நமது கலாசாரத்தை பண்பாட்டை குடும்ப அமைப்பினைச் சிதைப்பதற்காகச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணூக்கு ஆணை மதிக்கவும், ஒரு ஆணுக்குப் பெண்ணை மதிக்கவும் கற்றுத் தரவேண்டும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டு வேலைகளை இருபால் குழந்தைகளையும் செய்யச் சொல்ல வேண்டும். பெண்ணுக்கு உடல்நலமில்லாத நாட்களில் வீட்டு வேலையினை முழுவதுமாக அந்த வீட்டு ஆண்கள் பகிர்ந்து செய்ய வேண்டும். இந்த வேலை பகிர்வு எந்நாளும் இருக்க வேண்டும்.
நமது உறவின் விழாக்களுக்கும் அங்கு சென்று உறவுகளோடு மரியாதையோடும் அன்போடும் பழக அனைத்துச் சூழ்நிலைகளையும் சலிப்பில்லாமல் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிற ஒரு நிலையினை குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும்.
நமது வீட்டில் ஒவ்வொரு பண்டிகையையும், சடங்கு சம்பிரதாயங்களையும் சொல்லித் தந்து தவறாமல் கொண்டாட வேண்டும். இது மரபின் நீட்சி; மூடநம்பிக்கை அல்ல. மக்களின் இணைப்புக்கான நூல். அதனைச் சிதைக்கத்தான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்றெல்லாம் பல கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சிக்கித்தான் நமது பாரம்பரியத்தின் இணப்பும் மரபின் நீட்சியும் சிதைந்து வருகிறது. அது நமது தொன்மையையும் வரலாற்றையும் அழித்து விடும்.
அது போல சொந்த கிராமம் என்பது நாம் எங்கு சென்றாலும் அது நமது கருவறைத் தொடர்பு என்ற நினைவு இருக்க வேண்டும். நாம் பிறந்து வளர்ந்த ஊர், பூர்வீகம் அந்த ஊர் திடுவிழாக்கள் அதைத் தொலைத்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் அதன் அருமை அதிகமாகத் தெரியும்.
பூர்வீக கிராமத்தின் திருவிழாக்கள் அந்த ஊரின் ஒட்டு மொத்த சமூகத்தோடு நம்மை இணைக்கும் விழா. சமூக ஒற்றுமையை வலிமையாக்குபவை அவை. அவற்றைத் தவறவிடாமல் நமது குழந்தைகளோடு சென்று கொண்டாடுவது என்பது மிகுந்த அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும். பள்ளியில் இருக்கும் சிறு தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இதனைப் புறக்கணித்து குடும்பம் சமூகம் இவற்றின் பிணைப்பினை ஒற்றுமையினை நாம் நீர்த்துப் போகச் செய்யல் ஆகாது.
இவற்றை எதையும் நாம் செய்யாமல் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு குறை சொல்வதிலும் குற்றம் சுமத்துவதிலும் எந்த நியாயமும் இருக்காது.
நல்ல சமூகம் என்பது அங்கு பெண்கள் தேவதைகளாக தெய்வங்களாக மதிக்கப்படுவர். அவர்களுக்கு எந்த தீங்கும் நேராமல் ஆண்கள் பாதுகாப்பர். குடும்பங்களில் ஆண்கள் பெண்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நடப்பர். ஒரு குடும்பத்தின் தலைமை என்பது என்றும் பெண் தான் என்ற புரிதல் இருக்கும். ஆணை அவள் முன்னிறுத்தினாலும் அவனை இயக்கும் நற்சக்தியாய் அவள் திகழ்வாள்.
நற்சமூகம் என்பது சக்தியின் கைகளில். சக்தி என்பது அனைத்து தெய்வங்களிலும் பேதமின்றி உறைந்து நிற்பது. நமது தேசத்துப் பெண்களின் உள்ளத்தில் முப்பெரும் தேவியரின் சக்தி நிறைந்து நிற்கட்டும். சூலம் வேல் என அவர்களின் கைகளில் அபரிமித ஆற்றலும் வீரமும் வெளிப்படட்டும். சக்தி கொண்ட சமூகத்தை அவர்கள் சமைத்தளிக்கட்டும். பெண்மையின் தாய்மை என்பது மென்மை மட்டுமல்ல; குலம் காக்கும் வன்மையும் கொண்டது.
ஓம் சக்தி பராசக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக