சனாதன தர்மம் சிறக்க ஆன்மீக வளமும் ஆத்ம பலமும் பெற
மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவை எந்த கலப்படமுமில்லாத தூய்மையானதாகத் தேர்வு செய்து ஆலயங்களில் பயன்படுத்த வேண்டும்.
ஆலயங்களில் அதிகளவு மின்விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து எண்ணெய் வித்துகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்களை கலப்படமின்றி பயன்படுத்தி தீபங்களை ஏற்ற வேண்டும். குறிப்பாக கர்ப்ப கிருஹங்களில் மின்விளக்கு பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
பூமாலை என்பது வாழைநாரில் கட்டப்பெற்று ஸ்வாமிக்கு அளிப்பதே உத்தமமானது. மற்றவை ஏற்றதல்ல.
ஆலயத்திற்கு பூஜைப் பொருள்களை எடுத்துச் செல்ல நெகிழிப் பைகளை பயன்படுத்துதல் கேடானது.
ஆலயம் என்பது வியாபாரத்தலமல்ல அங்கு நாம் எதனையும் விலை கொடுத்து வாங்குவது நமக்கு நன்மை அளிக்காது.
பிரசாதம் என்பது கர்ப்பகிருஹத்தில் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்டவை, அணிவிக்கப்பட்ட பூ மாலைகள் விபூதி குங்குமம் தீர்த்தம் இவை மட்டுமே. பிரசாதம் என்பது விற்கப்படவும் கூடாது.
ஆலயங்கள் நமக்கு இறைசக்தியை அளித்து நமக்கு ஆத்மபலத்தை அளிக்கவே ஏற்பட்டவை. அங்கு நாம் அமைதியாக இருந்தால் மட்டுமே இறையனுபூதியை உணரவும் பெறவும் இயலும்.
எந்த இறைத்தலமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை பிரவாகிக்க குறிப்பிட்ட ஆகம முறைப்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆகமத்திற்கு உட்படாத புதிய சந்நிதிகள், கட்டிடங்கள் இவை அந்த ஆற்றலை நாம் பெற இயலாமல் செய்துவிடும்.
ஆன்மீகம் என்பது இலகுவான ஒன்றல்ல. அதனை அடைய மனமும் உடலும் பக்குவப்பட வேண்டும். பக்தர்களுக்கு வசதிகள் என்ற பெயரில் செய்யப்படும் அனைத்தும் இதனை சிதைத்து விடும்.
மலைக் கோவில்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். விஞ்ச் ரோப்கார் இவை அனைத்துமே நமது ஆன்மீக பயணத்திற்கான தடைக்கற்கள்.
வசதிகள் ஆன்மீகத் தலங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விடுகின்றன. ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோர் இந்த வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.
தல யாத்திரை ஒவ்வொரு மாதமும் நிழ்த்த வேண்டிய ஒன்றல்ல. எந்த மகானும் ஒரே கோவிலுக்கு மீண்டும் மீண்டும் சென்றதில்லை;உள்ளூர் கோவிலை புறக்கணித்ததுமில்லை. மாதா மாதம் நான் திருப்பதி சென்றுவிடுவேன் என்பது அகங்காரத்தை அளிக்குமே ஆன்றி அனுபூதியை அல்ல.
நாம் தினமும் செல்வது உள்ளூர் கோவிலாக இருக்கட்டும். அங்கு ஆகமப்படி அனைத்தும் நடப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதைச் சரியாகச் செய்தால் ஆங்காங்கு பரவிக் கிடக்கும் பல இறைச் சக்திகளும் அருளும் கூட நமக்குக் கிட்டும்.
வருடத்தில் ஒரு முறை தலயாத்திரை மேற்கொள்ளலாம். சென்ற கோவிலுக்கே செல்லாமல் புதிய ஆலயங்களுக்குச் செல்வது சாலச் சிறந்தது.
பொருள் வேண்டி பயணிப்பதும் இறைவனிடம் பேரம் பேசுவதும் பாவத்தைச் சேர்க்கும் செயலாகும். அருள் வேண்டியே ஆலயம் நோக்கிய பயணம் இருக்க வேண்டும்.
சபரிமலை போன்ற இடங்களுக்குச் செல்கையில் அதற்கான விரதத்தை முழுமையாகக் கடைபிடிக்காமல் செல்வது பயனற்றது என்பதோடு பாவத்தைச் சேர்க்கும். அந்த விரதத்தை அடுத்தவருக்கு சரியாக சொல்லாமல் விடுத்து அவரையும் தவறான பாதையில் பயணிக்கச் செய்வது கூடுதல் பாவத்தைச் சேர்க்கும். சபரிமலை யாத்திரை சுற்றுலா அல்ல என்ற எண்ணத்தோடு செயல்படுவது மட்டுமே அதற்கான பலனை அளிக்கும்.
ஆலயங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அங்கு அமர்ந்து உண்பது சரியல்ல. அங்கு குப்பைகளைப் போடுவது சத்தமாகப் பேசுவது இவை அனைத்தும் பாபத்தைச் சேர்க்கும் செயல். உண்பதே சரியல்ல என்கிற பொழுது அங்கு இயற்கை உபாதைகளைக் கழிப்பது எவ்வளவு தவறான செயல்.
ஆன்மீகம் இலகுவானது அல்ல. நெருப்பினைப் பயன்படுத்துவது போல. சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பாதிப்பு நமக்குத்தான்.
உள்ளம் பெருங்கோவில்; ஊனுடம்பு ஆலயம் என்ற நிலையினைப் பெற ஆலய யாத்திரை கவனத்துடனும் கூடுதல் அக்கறையுடனும் ஆன்மீக நாட்டத்தோடு செய்யப்பட வேண்டும்.
விரைவு தரிசனம் பெற காசு கொடுத்துப் போவதும் சிறப்புக் கட்டணங்களில் தரிசனம் பெறுவதும் ஆலயத்தின் நேர்மறை சக்திகளை நாம் பெறுவதைத் தடுத்துவிடும். அதனைத் தவிர்த்துவிடுவது சாலச் சிறந்தது.
இறை தரிசனத்திற்காக நாம ஜபத்துடன் காத்திருப்பது நமது ஆன்மீகத்தை உயர்த்தும் செயலாக அமையும். ஆத்ம பலத்தைப் பெருக்கும்.
தல யாத்திரைகளில் அதிக ஆலயங்களுக்குத் திட்டமிடுதலைத் தவிர்க்கலாம். தல யாத்திரையாக ஒரு ஆலயத்திற்குச் சென்றால் அங்கு முழுநாளும் இருத்தல் சிறப்பு.
ஆன்மீக விதிகளைச் சரியாகவும் முறையாகவும் பக்தர்களுக்குச் சொல்லி அவற்றைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் இவர்களுக்கு உண்டு. ஆகமப்படி அனைத்தையும் ஆலயத்தில் நிகழ்த்த வேண்டிய கடமையும் இவர்களுக்கு உண்டு. இவற்றிலிருந்து இவர்கள் விலகினால் கூடுதலான பாபத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்.
ஒரு ஆலயத்தில் ஆகம மீறல் நடக்கிறது என்றால் அந்தக் கோவில் அர்ச்சகர்கள் ஸ்தானீகர்கள் அறங்காவலர்கள் அந்தக் கோவிலைச் சார்ந்த மடாதிபதிகள் ஜீயர்கள் உள்ளூர் மக்கள் என அனைவருக்கும் அவரவருக்கு விதித்தபடி பாபம் சேரும் என்பது சத்தியமான ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக