சனி, 23 நவம்பர், 2024

நரக(கர)மயமாக்கல்

எனக்குப் பயணம் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் இயற்கையின் வெளிறிய வனப்பு இருக்கும் கிராமத்து சாலைகள் கூட இதமான ஒன்றாக இருக்கும் பரபரப்பான நகரத்து சாலைகளில் செல்வதைக் காட்டிலும்.

அப்படித்தான் ஒருநாள் செங்கல்பட்டிலிருந்து கேளம்பாக்கம் செல்ல திருப்போரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தேன். இந்தச் சாலை வனப்பகுதியைக் கடப்பதால் இருபுறமும் இயற்கை பச்சைநிறத் தோரணத்தை அமைத்து இருக்கும்.

இடதுபுறம் மாம்பாக்கம்  செல்லும் சாலை வர அந்தக் கிராமத்து சாலைகளை நோக்கி வாகனத்தைத் திருப்பினேன். வனப்பகுதியில் மட்டும் மேடும் பள்ளமுமான சாலை. அதனைக் கடந்து கிராமத்து எல்லையை அடைந்ததும் சிறிய தார்ச்சாலையில் பயணம்.

இருபுறமும் நெற்வயல்கள். அந்த நெற்பயிர்கள் வேகமாக ஆடத்துவங்கின. அவை ஏதோ என்னிடம் கூற விழைவதைப் போல் இருக்க சற்று ஓரமாக நிறுத்திப் பார்த்தேன். இப்போது அவை எனது எதிர்திசைக்கு தலையைக் காட்டி மீண்டும் என்னை நோக்கி சாய்ந்தன. அவற்றின் தலை சென்ற திசையில் பார்த்தேன். தொலைதூரத்தில் கேளம்பாக்கத்தில் அமைந்த உயரமான கட்டிடங்கள்.

விவசாயியின் அறுவாள் அறுக்க வருகையில் கலங்காத இந்த நெற்பயிர்கள் இந்தக் கட்டிடங்களைப் பார்த்து நடுங்குகின்றன. விவசாயி அறுத்தாலும் தனது வம்சத்தை மீண்டும் மீண்டும் பெருகி தழைக்கச் செய்வான் என்பது அதற்குத் தெரியும் போல. ஆனால் இந்த கான்கிரீட் ராட்சசன் இரு கைகளையும் விரித்து பூமியையே விழுங்குவது போல வந்து கொண்டிருக்கிறான். அவன் நெருங்கி விட்டால் நெல் என்ன புல்லும் கூட முளைக்க இடம் தர மாட்டானே என்ற அச்சம் போல.


அச்சத்துடன் அவை வேகமாக மீண்டும் மீண்டும் சுழன்றாடின. வாடிய பயிரைக் கண்டு வாட நான் வள்ளலாரில்லையே. அவை பகிர்ந்த வருத்தத்தை என்னுள் வாங்கி நானும் வருந்தி மேலே வான் நோக்கி அவற்றிற்கும் எனக்கும் அறிவில் வித்தியாசம் வைத்தாய். ஆனால் என் இனம் அந்த பகுத்தறிவை கடவுள் மறுப்புக்கும் இன வெறுப்புக்கும் என்றாக்கி மற்றெதையும் சிந்திக்கக் கூட மறுத்து ஒதுங்கி நிற்கிறதே!! என்று இறையிடம் உனக்குக் கருணை மிகுதியாயிற்றே; ஏனிப்படி இதனை வேடிக்கைப் பார்க்கிறாய்; உனது கருணையை இவற்றின் மேல் காட்டக் கூடாதா என்றேன்

இறை மௌனமாய் இருந்தது எந்த பதிலுமளிக்காமல்; அது இயங்கியும் இயங்காமலும் நிலையாகவும் வினையினையும் விளைவினையும் வேடிக்கை பார்க்கும் ஒன்றல்லவா? எங்கோ பரவி விரவியுள்ள விவசாயிகள் விவசாயத்தின் பெருமையை பேசிக் கொண்டிருக்கிறார்.;விதைகளை சேகரிக்கிறார்;இயற்கையோடு உறவாடுகிறார்;பாரம்பரியத்தின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் நிலங்களை ஆக்கிரமிக்கும் ராவணன்கள்;இன்னொரு புறம் இயற்கையை பேணிக் காக்கும் ராமன்கள் என காலம் சுழன்று கொண்டு இருக்கிறது.

இன்னொரு நாள் வேலூரிலிருந்து சென்னை சாலையில் பயணித்துக் கொண்டு இருந்தேன். வாலாஜாபேட்டை சுங்கத்தை நெருங்குவதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள கிராமத்தில் ஒரு நெடிதுயர்ந்து நின்ற பாறை பாதியாக வெட்டப்பட்டு இருப்பதைக் கண்ணுற்றேன். அதிலிருந்து இரத்தம் போல் நீர் வடிந்து கொண்டு இருந்தது. இங்கிருந்து பார்க்கையில் கருரத்தம் மை பூசியது போல உறைந்து நிற்பதாக இருக்கும். மனது வலித்தது என்னுடைய இயலாமையை நினைத்து.

ஒரு விரல் புரட்சி என்பார்கள்; ஆனால் எனது ஒற்றை விரல் மட்டும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடக் கூடும். அந்த கிராமத்தில் உள்ளவர்களும் என்னைப் போன்ற மனிதர்கள்தானே? அவர்களுக்கு இது வலிக்கவில்லையா? அல்லது தினமும் அந்த சாலையில் கட்ந்து போகும் ஆயிரக்கணக்கானவர்களும் என்னைப் போன்ற இயலாமையை கொண்டவர்களா? அதில் ஒருவர் கூட ஊடகவியலாளராக இருக்க மாட்டாரா? அறச் சீற்றத்தோடு போராடும் மனத்திண்மை கொண்டவர் எவரும் இருக்க மாட்டாரா? அவர்களுக்கெல்லாம் இந்த ஒற்றைவிரல் புரட்சி பற்றித் தெரியாதா?

அது போல இன்னொரு முறை திருச்சியிலிருந்து திருவையாறு செல்லும் சாலை அதிக வாகனங்கள் செல்லாத காவிரியின் இன்னொரு கரையில் பயணம். கரூர் திருச்சி சாலையில் நெஞ்சில் கனத்துடனும் பயத்துடனும் பயணித்த பல நாட்கள்; காரணம் மணல் ஏற்றி அசுர வேகத்துடன் செல்லும் லாரிகள். ஆனால் இந்தப் பயணத்தில் இந்தக் கிராமத்துச் சாலைகளிலும் மணல் வண்டிகள் பகலிலும் வரிசையாகச் சென்று கொண்டு இருந்தன. தஞ்சை மண்டலம் பாதுகாப்பு மண்டலம் என்று போராடியவர்கள் எவருக்கும் இந்த அளவற்ற மணல் அள்ளுதல் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லையா?

இதுபோல கனிமவளங்கள் கொள்ளை


போவது ஒரு புறமென்றால் நகரமயமாக்கல் என்று ஒவ்வொரு பேரூராட்சியும் பக்கத்தில் உள்ள கிராமங்களை விழுங்கி நகரமாகிறது; நகரம் மாநகரமாகிறது; அது மேலும் மேலும் அருகமை கிராமங்களை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

காந்தி கிராம ஸ்வராஜ்யம், ராம ராஜ்யம் குறித்துப் பேசினார். ஜே சி குமரப்பாவின் வழி காந்தி சொன்ன கிராம பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த அனைத்துக் கருத்துகளும் ஆள்பவர்களுக்குத் தெரியாது அல்லது அதைக் குறித்துக் கவலைப்படத் தயாராக இல்லை. இப்படி கிராமங்களை நகரமாக்கி விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றி விட்டால் நகரத்தில் வாழும் மனிதனுக்கு உணவு எப்படித்தான் கிடைக்கும்?

ஒரு நகரத்தின் சுற்றளவு குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும்; அதனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட பரப்பளவிற்கு அந்த நகரத்திற்கு உணவளிக்க விளைநிலங்களும் கிராமங்களும் இருக்க வேண்டும். அவை என்றும் நகரமயமாக்கப்படாது என்ற உறுதியை ஆள்பவர்கள் ஏற்படுத்த வேண்டும்; அல்லது அவர்களை அதைச் சட்டமாக்க மக்கள் காந்திய வழியில்  போராட வேண்டும்.

கிராமங்கள்தான் இந்த தேசத்தின் உயிர்நாடி; மனிதர்களின் சுவாசக் குழாய், உணவுக் குழாய் எல்லாம். அவற்றின் இருப்பு மிக மிக அவசியம். இது சாத்தியப்பட வேண்டும் என்றால் கிராமங்களில் மக்கள் கட்சிகளைத் தாண்டி தங்களது கிராம நலனுக்காக இணைய வேண்டும். கிராமத்திலும், பேரூராட்சிகளிலும் கிராமத்தின் சார்பில் பேசக் கூடிய பிரதிநிதிகள் இருக்க வேண்டுமே அன்றி கட்சிகளின் விருப்பங்களை, ஆளும் வர்க்கத்தின் விருப்பங்களைச் செயல்படுத்தும் பிரதிநிதிகள் இருக்கக்கூடாது.

நேர்மையான, நியாயமான, கட்சி சார்பற்ற பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். குறிப்பாக இதுநாள் வரை பல பிழைகளுக்கு காரணமாகவும், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற துணையாகவும் இருந்தவர்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். கிராமங்கள் இதனை முன்னெடுத்தால் அன்றி அவர்களுக்கு வேறு வழி இல்லை.


எனது பங்காக நான் என்ன செய்வது என்ற கேள்வி எழ, இதனைப் பதிவதும், பகிர்வதும் என்று தோன்ற இதோ பதிந்து விட்டேன். என்னைப் போன்று வருத்தப்பட்ட ஜீவன்கள் சிலர் இருக்கக்கூடும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம். அறம் வெல்லும் என்ற எண்ணம் மிகுந்திருக்க வேண்டுகின்றேன்.

தர்மம் தோற்பது [போல இருக்கும். இறுதியில் அதுவே வெல்லும். அறம் மறவற்க; அறமே துணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக