பெரியசாமி ஐயாவும், சாமிநாதனும் பேசிகொண்டிருந்தபோது கவனித்துக்
கேட்ட விஷயங்களை உங்களிடம் அவர்களின் அனுமதியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பெரியசாமி: தன் கையே தனக்குதவின்னு சொல்றியே. அப்ப உனக்கு கடவுள்
நம்பிக்கையில்லையா?
சாமிநாதன்: ஐயா, கடவுள் நம்பிக்கை இருக்கிறதாலதான் நான் என்
கையே எனக்குதவின்னு நம்புறேன்.
பெரியசாமி: புரியலையே?
சாமிநாதன்: ஐயா, இந்த உலகிலுள்ள பொருள்களையும், உங்களையும் என்னையும்
இறைவனே படைத்தார். சரிதானே?
பெரியசாமி: ஆம்! இதிலென்ன சந்தேகம்?
சாமிநாதன்: அப்படி இருக்கையில் எனக்கு உழைக்க கையையும் கொடுத்து,
சிந்திக்க மூளையையும் கொடுத்துள்ள இறைவன் அதை பயன்படுத்துவதற்காகத்தானே அளித்துள்ளான்.
அதனை முழுமையாகப் பயன்படுத்துதல்தானே, அவனுக்கு நன்றி செலுத்துதலுக்கும், நம்புவதற்கும்
சரியான ஒரு வழிமுறையாய் இருக்கும்.
பெரியசாமி: சரியாகத்தான் சொல்வது போல இருக்கிறது. ஆனால் அவனின்றி
அணுவும் அசையாது; அனைத்தும் அவன் செயல் என்பன போன்ற சொற்றொடர்கள் அனைத்துச் செயலுமே கடவுளால்
நடக்கிறது. மனிதனால் ஆவது ஒன்றுமில்லை என்பது போல அல்லவா சொல்லப்படுகிறது. அப்படியெனில்
நீ சொல்வது கடவுள் நம்பிக்கைக்கு முரணாக அல்லவா இருக்கும்? நீ இந்த வார்த்தைகளை இல்லை
என்று மறுக்கிறாயா?
சாமிநாதன்: இல்லை ஐயா! இந்த சொற்றொடர்களை நான் முழுமையாக ஏற்றுக்
கொள்கிறேன். இவை மேலோட்டமாக மனிதன் செயலில் யாதொரு பயனுமில்லை என்பதுபோல தோற்றமளிக்கிறது.
உண்மையில் அப்படியல்ல! நான் முன்னமே சொன்னது போல அனைத்தையும் படைத்தது இறைவனே எனும்போது
அவன் அனைத்துள்ளும் நிறைந்துள்ளான், அப்படியெனில் உங்களுள்ளும் என்னுள்ளும் அவன் நிறைந்திருப்பதால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்யும் செயலைப்போலத்தானே? இதைத்தான் இச்சொற்றொடர்கள்
குறிக்கின்றன.
பெரியசாமி: சரி! நீ சொல்வதை ஏற்றுக்கொண்டால், கடவுள் இல்லை
என்று சொல்பவர்களின் செயலும் கடவுளின் செயலாகுமா? இதுவும் முரணாகத்தானே அமையும்?
சாமிநாதன்: ஐயா! இங்கு முரணாகக் காணப்படும் ஒன்றும் ஒன்றையொன்று
சார்ந்துள்ளன. இங்கு தெய்வ சிந்தனை வளர வேண்டுமெனில் அதற்கு தெய்வ நிந்தனை தேவைப்படுகிறது.
நிழலின் அருமை வெயிலில்தானே தெரியும். தெய்வநிந்தனையில் வாழ்பவர் தெய்வ சிந்தனையை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்போது, அவர்கள் அதன் அருமையை பரிபூரணமாக உணர்ந்து கொள்வர். மேலும் தெய்வ சிந்தனை மேற்கொண்டிருப்போர்
அதனை சரியான வழியில் கைக்கொள்ள இந்த நாத்திகவாதம் முழுவதுமாக உதவுகின்றது. உண்மையை
ஆய்ந்தறிய உதவுகின்றது. எதிரிலுள்ளவர் இல்லை என்று சொல்லும்போது, நாம் இருக்கிறது என்று
நம்பும் ஒன்றை முழுமையாக அறிந்து கொள்ள முயலுகிறோம். உண்மையில் நாத்திகமே அதிகளவில்
தெய்வத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. அது இல்லை இல்லை என்று ஒரு புறம் சொல்லச் சொல்ல, இருக்கிறது இருக்கிறது என்று மறுபுறம் அது பீறிட்டு அதி உற்சாகத்துடன் வளர்கிறது.
நீங்கள் கண்கூடாகக் காணலாமே! நாத்திகம் நம் தமிழகத்தில் எந்த
அளவு பேசப்பட்டதோ அதனைவிட பன்மடங்கு பக்தியாளர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது.
அங்கு தவறுகள் நடந்து ஆன்மீக கூட்டங்கள் கேலிக்கூத்தாக்கப்பட்டபோது, தவறுகளை ஆராய்ந்து
உண்மையான ஆன்மீகத்தை நோக்கி ஆத்மார்த்தமாக செல்ல பல இடங்களில் சிறு குழுக்கள் முயற்சிக்க
மீண்டும் ஆன்மீக ஒளி பீறிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கிறது.
பெரியசாமி: அப்படியா? சரி, இந்த கேள்விக்குப் பதில் சொல்லப்பா!
அப்ப சாமியாரெல்லாம் எதுவும் செய்ய வேண்டாம். பகவானை நினைத்துக் கொண்டிருந்தாலே போதும்;
எல்லாமே கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்களே! அது பொய்யா?
சாமிநாதன்: உங்களுக்கு உண்மையா சமீபத்துல நடந்த இரண்டு கதைகளைச்
சொல்றேன்.
ஒரு சமூக நலத்தொண்டர். அவர் ஒரு இயக்கத்தில் இருந்து பணியாற்றிக்
கொண்டிருந்தார். திருமணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. நாளடைவில் அந்தச் சமூகப்பணிகளையும்
தாண்டி ஆன்மீக நாட்டத்தோடே செயல்படத்துவங்கினார். தனக்கென விதிக்கப்பட்ட நியமங்களை
அனுஷ்டிக்கத் துவங்கினார். நாளடைவில் அவருக்கு இதில் தீவிர செயல்பாட்டுக்கான எண்ணம்
உதிக்க உணவுக்கான கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கத் துவங்கினார்.
இவர் சமூக சேவகர் என்பதால் இவரது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் கேள்வி இவருக்குத் தோன்றியது. பகவாந்தான் படியளக்கப் போகிறான்.
அதனால யாரும் சாப்பாடு போடாம நாம யார்கிட்டேயும் சாப்பாடு கேட்கக்கூடாதுன்னு முடிவெடுத்தார்.
முடிவெடுத்த அன்று காலை இவர் தங்கியிருந்த இடத்தில் தன்னுடைய அன்றாட நியம அனுஷ்டானங்களை
முடித்துக் கொண்ட அவர் அருகிலிருந்த தெரிந்தவர் வீட்டுக்குச் சென்றார். இவர் சென்றவுடன்
அவர்கள் இவரை ஆனந்தமாக வரவேற்று பேசிக்கொண்டேயிருந்தனர். ஆனால் சாப்பிடச் சொல்லி ஏனோ
கேட்கவில்லை. அங்கு இவருக்குப் பல நாள் உணவளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை ஏனோ
அவர்கள் உணவைப்பற்றியே பேசவில்லை. இவர் சற்று நேரம் சென்ற பின்னர் பசி தாங்க முடியாததால்
அங்கிருந்து கிளம்பத்துவங்கினார். அவர் கிளம்பும்போதும் யாரும் அவரிடம் சாப்பிட்டீர்களா
என்று கேட்கவில்லை. அவசியம் அடிக்கடி வாருங்கள் என்று வழியனுப்பி வைத்தனர்.
அடுத்த இரண்டு வீடுகளிலும் இதே நிலைமை. ஒவ்வொரு வீட்டிலும் அரை
மணி நேரம், பயண நேரம் என நேரம் கடந்ததே ஒழிய அவருக்கு உணவு கிடைத்த பாடில்லை. மிகவும்
பசியால் வாடிக் களைத்து நான்காவதாக அடைந்த வீட்டில் இவர் உள்ளே நுழைந்தவுடன் வரவேற்ற
அன்பர்கள், முதலில் வாங்க சாப்பிடலாம்; அப்புறமா பேசலாம் என்று உணவளிக்க அழைத்துச்
சென்று விட்டனர்.
இன்னொரு கதை; மிகவும் உடல்நலம் பாதித்த ஒருவர் மருத்துவமனைக்குச்
சென்றார். இருதய நோயாளியான அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தால்தான் மறுவாழ்வு கிடைக்கும்
என மருத்துவமனை ஆய்வு முடிவுகள் சொன்னது. மருத்துவர் அவரிடம் அப்ப என்ன தேதியில அறுவைச்
சிகிச்சை செய்யலாம் என்று சொல்லுங்கள்; அதன்படி தேவையானவற்றை ஏற்பாடு செய்துவிடலாம்
என்றார்.
நோயாளி, ஐயா நீங்கள் உங்களுக்கு சவுகரியமான நாளில் உடனடியாக
அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்; நான் என் அப்பன் முருகனிடம் சென்று
பிரார்த்திட்டு வந்துவிடுகிறேன் என்றார். உடனே மருத்துவர் கோபமாக ஒன்று பிரார்த்தனை
செய்யுங்கள், அல்லது அறுவை சிகிச்சை செய்யுங்கள். நான் அறுவை சிகிச்சை செய்து பிழைச்சிட்டா
முருகன் காப்பாத்திட்டான்னு சொல்றதுக்கா? நோயாளி விக்கித்து நின்றார்.
பெரியசாமி: இந்த இரண்டு கதை மூலமா நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு
நான் சொல்றேன். சரியான்னு பாருங்க தம்பி!
முதல் கதைல வருகிற மாதிரி பகவானே எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு
அமைதியா உட்கார்ந்துடறது அவ்வளவு சுலபமில்லை. அது மிகவும் கடுமையான தவமா இருக்கும்.
அதற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனோநிலை வேண்டும். அது பிரமச்சாரிக்கும், சந்யாசிக்கும்
வேண்டுமானால் சாத்தியப்படலாம். இல்லறத்தானுக்கு சரியான உதாரணம் இரண்டாம் கதையில் வரும்
நோயாளிதான். பிரச்சினையை எதிர்கொண்டு செயலாற்றும் அதே நேரத்தில் இறைவனை பிரார்த்திக்க
மறக்கவுமில்லை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழும் வாழ்க்கையும் சாத்தியம்.
எதிர்பார்ப்புகளோடும், இறை சிந்தனையோடும் வாழ்வதும் சாத்தியம். இதில் ஏதாவது ஒன்று
மட்டுமே உலகில் இருக்கும் என்று மருத்துவரைப் போல் சிந்தித்தால் அது பைத்தியக்காரத்தனம்.
முரண்பட்ட விஷயங்கள், எதிரெதிர் திசையில் சுழலும் சக்கரங்களே வாழ்க்கையையும், இயந்திரத்தையும்
நகர்த்த முடியும்.
சாமிநாதன்: மிகவும் சரி ஐயா!
பெரியசாமி: வாழ்த்துக்கள்! மீண்டும் ஒருநாள் நிச்சயம் சந்திப்போம்! போய்வருகிறேன்.
சாமிநாதன்: ஆகட்டும் ஐயா! வருகிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக