சனி, 1 மார்ச், 2014

அன்புள்ள மகளுக்கு,,
                     நீ அருகில் இருந்தாலும் கடிதம் எழுதி என் மனதை உன்னிடம் தெரியப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாய் போனதால், இதோ இன்னொரு கடிதம் எழுதுகின்றேன். என் எண்ணங்களை சரியான முறையில் நீ புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

                     பெண்ணாய் பிறந்திடவே பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இது வெறும் வார்த்தைகளல்ல; சத்யமானவை. ஆயின் இன்றைய சூழலில் மட்டும் அல்ல நெடிய ஆண்டுகளாகவே பெண்ணினம் இங்கு தன்னிலை மறந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பெண்மணி என்பவள் உண்மையில் கண்மணி என்றே முழக்கமிட வேண்டியிருக்கின்றது. பெண்ணருமை தெரியாமல் சுற்றி இருப்போர்கள் கண்டபடி பேசினாலும் அந்த ஏச்சுக்களை உனது ஞானத் தீயிலிட்டு பொசுக்கி விடு.

                     பெண் ஞானியா? உலகத்தை படைத்திட்ட பெண் எனும் தெய்வமே முதல் ஞானி. படைப்புத் தொழிலுக்குக் காரணமானவற்றை அது மனித இனமோ, தாவர இனமோ பெண்சக்தியாகத்தான் நாம் காண்கின்றோம். படைப்பாற்றல் என்ற ஒரு அருமையான சக்தி உன்னிடத்தில் இருக்கிறதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். இந்த படைப்பாற்றல் என்பது புதிய உயிர்களை படைப்பது மட்டுமல்ல இந்த உலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு புதிய படைப்புகளிலும் பெண்களின் சக்தியில்லையெனில் நடைபெறாது.

                     இந்த ஞாலத்தைக் காத்திடும் சக்தியாக பராசக்தியை காண்கிறோம்;அவளே படைத்திடும் கடவுளாகிய பிரம்மனை படைத்ததாய் அறிகிறோம். இன்று பெண்கள் தங்கள் சக்தியினை உணராமல் பேதையாய் வாழும் நிலை. கல்விகள் பல கற்கும் நீங்கள், கேள்விகள் பல கேட்டு உங்கள் சக்தி உணர்ந்து, இமயத்தினும் மேலாய் உயர்ந்து எழுந்து நிற்க வேண்டும்

                     இந்த அகண்ட பாரததேசம் ஒரு காலத்தில் பெண்மையின் சக்தி, அருமை பெருமைகளை பரிபூரணமாய் உணர்ந்திருந்தது. உலகின் மற்றனைத்து பகுதிகளிலும் பெண்ணை ஒரு பெண்ணாகவே பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவளை தாயாய் வழிபட்டது. இந்த மண்ணை தாய் மண் என்றும், நதிகள், காடுகள், மலைகள் என அனைத்தையும் பெண் வடிவாகவும், தாயாகவும் கண்ட பூமி இது. இன்று அந்நிலையை மீட்டெடுக்க வேண்டிய சூழல். இந்த விதியினையும் மாற்றும் வல்லமை பெண்களிடத்து மட்டுமே!                    

                     சரி இந்த நிலைமை எதனால் ஏற்பட்டது? உங்கள் சக்தி நீங்கள் உணராமல் போனது மட்டுமல்ல; உங்கள் சக பெண்ணினத்தை நீங்கள் சரிவர நடத்தாததாலும் ஏற்பட்டிடுக்கக் கூடும். இன்றும் விண்ணிலே பறந்திடும் வேலையைச் செய்கின்ற பெண்களை மதிக்கின்ற நாம், மண்ணிலே இறங்கி உழைத்திடும் மாதரை மதியாமல் போவது ஏன் மகளே?

                     படிப்போடு வீட்டிலே பலப்பல வேலைகள் இருப்பதை மறந்தாய்; உன் வீட்டு வேலையை இன்னொரு பெண்ணிடம் தந்தாய்; எந்தப்பணி இருந்தாலும் உன் வீட்டுக்கடமையை மறுப்பது நியாயமா? அன்று ஆரம்பக் கல்வியோடு நின்றுவிட்டனர் பெண்கள், இன்று உயர்கல்வி பல பெற்றுள்ளனர்; அன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிய பெண்கள் இன்று வானமே எல்லையென வாழ்கின்றனர்; இருந்தும் இன்று உள்ளுக்குள் பயம் கொண்டு வாழ்வதேன்?

                     காரணம், எது சுதந்திரம், எது கட்டுப்பாடு, எது அடிமைத்தனம் என்பதன் வரையறை அறியாமல் போனதே! இதன் வரையறை வகுக்கப்படும்பொழுது நமது சமூக அமைப்பு, அதன் கலாசாரம், பாரம்பர்யம் இவைகளை கருத்தில் கொள்ள வேண்டும். சுதந்திரம் என்பது நம்மிடம் உள்ள அனைத்தையும் தகர்த்தெறிவதல்ல! ஒரு உடை இருக்கிறது.அதில் கறை ஏற்பட்டால் கறையைத்தான் போக்க முனைய வேண்டுமே ஒழிய உடையை அல்ல! நம்மிடம் சிக்கல் ஏற்பட்டது இவ்விடத்தில்தான். நாம் நமக்கான ஒன்றை விட்டு வேறொரு கலாசாரப்படி, சிந்தனைப்படி இவ்வரையறைகளை வகுக்க முற்பட்டதுதான்.

                     பெண்ணை தாய் என்ற உயர்ந்த நிலையில் கண்டு வந்த மக்களிடத்தே ஆணும் பெண்ணும் சமம் என்று கூறியது எவ்வளவு முட்டாள்தனம். உயர்ந்த இடத்திலிருந்து ஒரு படி கீழிறக்கிக்கொண்டது தன்னைத்தானே பெண் சமுதாயம். சமம் என்று கூறிக்கொண்டதோடு நில்லாமல் எதில் போட்டி போடுவது என்றில்லாமல் குற்றங்கள் புரிவதற்கும், போதையின் பாதையில் பயணிப்பதற்கும் சுதந்திரம் என்று அர்த்தம் கொண்டால் எவ்வாறு சரியாகும்.

                     படிக்கின்ற காலத்திலே பாதிக்கின்ற ஒரு செயல் காதல். திருமணம் என்பது பெண்ணுடைய முடிவுதான்; சந்தேகம் அதிலில்லை. புரியாத புதிராக தெரியாத மனிதரை கைபிடிக்க நினைப்பது சரியா? கைப்பிடிக்கும் மணவாளன் நம்பிக்கை தரவேண்டும்; நல்லோர்கள் துணையும் நம்பிக்கையும் இங்கு இருக்க வேண்டும். உயிர்க்காதல் உயர்காதல் எல்லாமே வாய்ஜாலம்! உயிர் தந்த பெற்றோரை உதறியே தள்ளிடும் காதல் சரியா? ஈன்ற உறவுகள் வலி கொண்டு அழும்போது அவ்வாழ்க்கை சிறக்குமா? உறவினைத் துண்டித்து, உணர்வினைத் தண்டித்து காதலைக் கைப்பிடித்தல் முறையோ?

                     தாய்தந்தை சம்மதம் தந்தால்தான் காதலும் உன்னதம் இவ்வுலகில்! பிள்ளைகள் சம்மதம் தந்தால்தான் திருமணம் என்பதை பெற்றோரும் நினைவு கொள்ள வேண்டும். இருபது வருடங்கள் வளர்த்திட்ட பெற்றோரை இழந்திட ஒரு நிமிடம்; ஆனால் இழந்திட்ட பெற்றோரை மீண்டுமே அடைந்திட பலவருடம் துடிக்கின்ற நிலை சரியா? திருமணம் என்பது இருமனம் இணைவது. பணம் கொண்டு திருமணம் முடிவாகும் வேடிக்கை இங்கு நடைபெறுவதேன்? சாதகம் இல்லையென்றால் ஜாதகம் சரியில்லை எனச் சொல்லி திருமணத்தை நிறுத்தும் அவலமும் இங்கு ஏன்?

                     நல்ல இடம் என்பதை பணமுள்ள இடமென்றும், பணமில்லை என்றால் நல்லவர் என்றாலும் சரியில்லை என்பதும், பணத்தினை மதித்து குணத்தினை மிதித்திடும் நிலை இங்கு ஏனம்மா? தன்னுடைய விருப்பமே முக்கியம் என்று பெற்றோரும், பெற்றவர்களும் நினைக்கும் நிலை மாற வேண்டும். குடும்பமே சேர்ந்து விரும்பிடும் நிலை வர வேண்டும்.

              மாற்றங்கள் என்பது மாறித்தான் வருவது;மாறாத நிலையிது மகளே! தோற்றங்கள் மாறினால் ஏற்றங்கள் வந்திடும் நினைப்பிங்கு ஏற்பட்டது ஏன் மகளே! வெண்மையோ கருமையோ அதனதன் இயல்பிலே இருப்பது நல்லது. கருமையை வெண்மையாய் மாற்றிட நினைக்கும் சிறுமைகள் ஏனிங்கு? நிறத்திலே உயர்வில்லை, குணத்திலே அது உண்டு என்ற நிஜத்தை நீ உரைப்பாய்! இறைவனால் தரப்பட்ட இயல்பான உருவம் இணையில்லா படைப்பு எனும்போது நிலையான அழகினை நிலைகுலையச் செய்திடும் வீண் அழகு நிலையங்கள் இங்கு ஏன்? அழகினை அழகாக்க நினைத்திடும் செயல்முறைகள் அனைத்தும் செயற்கையே. இயற்கையை அழித்திங்கு செயற்கையை புகுத்திடும் இழிநிலை எவ்வகையில் நியாயம் மகளே?

                     இனியென்ன பெண்ணிற்குள் ஒளிந்து கிடக்கும் பேராற்றலை அறிந்து செயல்படுவதுதான் இதற்கு ஒரே தீர்வாக அமைய முடியும். எய்திடும் கணை யாவும் இலக்கினை அடையாது. ஆனால் இலக்கினை முடிவு செய்து அடைந்திடும் கணையாக நீ மாறு! உனைச் சுற்றி உள்ளோர்க்கு உன் வாழ்க்கை நம்பிக்கை தர வேண்டும். உன் சமுதாயத்தை உயர்த்திடும் நம்பிக்கை உனக்குள்ளே வரவேண்டும். நினைப்பது நடப்பதும், நடப்பது சிறப்பதும் உனக்குள்ளே உருவாகும் நம்பிக்கையினால் மட்டுமே!
                    
                     அதிகாரக் கூட்டத்தினை எதிர்கொள்ளும் துணிச்சலும், மதிகொண்டு மண்ணுலகை மாற்றிடும் வல்லமையும், விதிதன்னை மாற்றிடும் விந்தைகளும் நீயறிந்திருந்தாலும் வீணான ஓர் தயக்கம் உன்னுள்ளே ஓர் இழையாய் ஓடிக்கொண்டிருப்பதேன்? தயக்கத்தை உதறியெறிந்து, தார்மீக நெறியுணர்ந்து தனியொருவளாய் நீ முனைந்திடும்பொழுதிலே உனது பின்னே பெண்ணினம் முழுவதும் நின்று கொண்டிருக்கும்.

                     பிறப்பதும் இறப்பதும் புதிதல்ல, சிறப்பது வேண்டும். வெறுப்பது என்பது நமை நாமே அழிப்பது; பொறுப்பது என்பது பொறுப்போடு இருப்பது என்பதை உணர்ந்திடு!  விரைவாக செயல்படும் உன்னுடைய திறன் கண்டு இந்த உலகம் வியந்து போக வேண்டும். பயந்திடும் நிலை வேறு, பணிந்திடும் நிலை வேறு என்றுணர்ந்து, பாய்ந்திடும் துணிவிருந்தும் ஓய்ந்திடும் நிலை கொண்ட பெண்ணினம் மாறட்டும் உன் செயலால்! நித்தமும் நன்மைகள் நிகழ்த்திடும் ஒளியாக திகழ்ந்திடு!

                     இந்திய தேசத்தின் இணையில்லா பெண்களை இங்கு நீ நினைவு கொள்! கார்க்கி முதல் கல்பனா சாவ்லா வரை பல்துறையிலும் அழுத்தமாய் காலடி பதித்து சாதனை புரிந்த பெண்களின் வழி வந்தவள் நீ என்று உணர்! ஒவ்வொரு பெண்ணும் தான் செல்லும் துறையினை தானே முடிவெடுக்கும் நிலை வேண்டும்! விடுமுறை நாட்களில் ஓய்வென்ற பெயரிலே தொலைக்காட்சி முன்பாக தோய்வாக இருந்திடும் தோழிகளை மாற்றிவிடு! இருக்கின்ற காலம் மிகமிகக் குறைவு; தயக்கமோ மயக்கமோ இன்றி முன்னேறிச் செல்!

                     நமது குரு நெமிலி ஸ்ரீபாபாஜியின் சிந்தனைகளையும், வார்த்தைகளையும் உள்வாங்கி நான் வரைந்திருக்கும் மடலிது. குருவின் திருவருள் என்றும் துணையிருக்கும் என்ற நம்பிக்கையோடு நடைபோடு! வெற்றி உனதே! பாரதத் தாய் உலகிற்கெல்லாம் வழிகாட்ட நீங்கள் அத்துணை பேரும் களம் கண்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் !
                    
                                                        அன்புடன்,
 
                    சு. சத்ய நாராயணன்



        



                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக