திங்கள், 8 செப்டம்பர், 2025

நீரின்றி அமையாது...........

         நீரின்றி அமையாது உலகு; நீரின்றி அமையாது உழவு; நீரின்றி அமையாது உணவு; நீரின்றி அமையாது உயிர். 


        இந்த பிரபஞ்சம் மட்டுமல்ல இந்த பிண்டம் என்கிற உடலும் பஞ்ச பூதத்தினால்தான் ஆனது என்று பல ஞானியரும் யோகியரும் கூறிச் சென்றுள்ளனர். 

        உலகம் மட்டுமல்ல இந்த உடம்பும் 70 சதவிகிதம் நீரால் நிறைந்திருக்கிறது. ஆனால் என்ன கற்றிருந்தும் "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற வள்ளுவனின் வாசகத்தினை நாம் என்றும் பின்பற்றுவதில்லையே.

        நாம் இப்பொழுதும் இந்த புவியின் அமைப்பினைச் சற்றே கவனம் கொண்டு கண்டால் விண்ணிலிருந்து வீழும் மழைத்துளிகள் சங்கமமாகி மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி அங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவற்றோடு சங்கமமாகி ஓடை என மாறி  குட்டை குளம் ஏரி என தங்கி பின் சிற்றாறாகி பெரும் ஆற்றில் சங்கமித்து அது மற்றொன்றில் இணைந்து முடிவில் சாகரத்தில் சங்கமமாகிறது. மீண்டும் விண்ணோக்கி ஏகுகிறது மழைத்துளியாய் பிறப்பெடுக்க. இஃது இயற்கை அமைத்து வைத்த பாதை.


        ஓடைகளை, வாய்க்கால்களை  நிரவி நிலத்தோடு இணைத்து பட்டா வாங்கிக் கொள்கிறோம்.குளங்களை ஏரிகளை தூர்த்து வீட்டு மனைகளாக மாற்றுகிறோம். வீடு கட்ட மணல் அள்ளி ஆற்றினை மலடாக்குகிறோம்.  சாகரத்தினை நீர் அடையும் வழியை அடைத்து இயற்கை சக்கரம் இயல்பாய் சுழலத் தடை ஏற்படுத்துகிறோம்.

        இதோடு விட்டோமா, வீதிதோறும் இயற்கையாய் அமைந்த அல்லது செய்வித்த மழைநீர் வடிகால்களை கழிவுநீர்க் கால்வாயாக மாற்றுவதோடு


குப்பை போடும் இடமாக மாற்றி விட்டோம். அனைத்து நீர் நிலைகளிலும் நாம் செயற்கையாய் உருவாக்கிய கழிவுகளால் நிரப்பி இருக்கிறோம். அப்படி இயற்கையை வஞ்சனை செய்வதற்கு நாம் கிஞ்சித்தும் வெட்கப்படுவதில்லை. 

        இதற்கு மேலும் தொழிற்சாலைகளை நிறுவி அதன் கழிவுகளை நீர்நிலைகளில் கலக்கிறோம். நீரின்றி அவதிப்பட்டு ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடி நீரான புவியின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறோம். நீர் தீர்ந்தபிறகு சிறிது கூட நன்றியுணர்வு இல்லாமல் அதிலே சாயக்கழிவினை கலந்தோரும் இப்புவியில் உண்டு.

        இவற்றையெல்லாம் இறைவன் அறிய மாட்டானென்று சுற்றுச் சூழல் பாதுகாக்க வேண்டுமென்று பதாகை ஏந்துவோம்; பேரணி நடத்துவோம். வீதிமுழுதும், ஊர் முழுதும், நாடு முழுதும் என மரக்கன்றுகளை நடவு செய்வோம். நாளை அதற்கு நீரெப்படி என்ற எண்ணம் சிறிதும் இன்றி நம் வேலை பார்க்க நடையைக் கட்டுவோம். மீண்டும் ஓர்நாள் கூடி மரக்கன்றுகள் அழிந்து போன அதே இடத்தில் புதிய பதாகை புதிய சிறப்பு விருந்தினர் என புதிய மரக்கன்றுகளை நடவு செய்வோம்.

        நமது தொழிற்சாலைகளுக்காக, சாலை அமைக்க, கோவில் கட்ட என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி சாய்ப்போம். பசுமை வீடுகள், பசுமைச் சாலைகள் என அவற்றிற்கு பெயர்சூட்டி விழா எடுப்போம்.  கார்பன் ரேட்டிங்கிற்காக மரங்களை அழித்து ஒரு புறம் காற்றாலைகள், வேறொரு புறம் மரக்கன்றுகள் நடவு என வாழ்க்கை விழாக் கோலமாகத்தான் போகிறது. 

        மழைநீர் செல்லும் பாதையை அடைப்பது மட்டுமல்ல அதை ஈர்க்கும் மரங்களை அழிப்பது மட்டுமல்ல மழைத் துளிகள் வீழ்ந்து அருவியாகவும் ஆறாகவும் பெருக்க உதவும் மலைகளை வெட்டிக் கொள்ளை அடிப்பது மட்டுமல்ல அதன் வேரையும் வேரடி மண்ணையும் அல்லவா விற்றுப் பணமாக்குகிறோம்.

        நாளைய பிணங்கள் இன்றெரியும் பிணத்தை வேடிக்கை பார்க்கின்றன என்ற வாசகங்களைப் படித்து அந்த நொடி மெய்சிலிர்க்க மெய்ஞானம் விவாதித்து அகன்ற அந்நொடி முதல் பொருள்முதல்வாதத்தில் வீழ்ந்து திளைக்கிறோம் சாக்கடையும் புரளும் பன்றிகளைப் போல.

        இத்தனை பாதகங்களை பிரபஞ்சத்திற்கு செய்து வானம் பொய்த்துவிட்டது பருவம் தவறி மழை பொழிந்து பயிர்களை நாசமாக்கி விட்டது என்று இயற்கையின் மீது ஐபிசி சொல்லி குற்றப் பத்திரிக்கை எழுதுவதில் நமக்கு ஈடு இணை நாம் மட்டுமே.

        ஒரு தனி மனிதனுக்கோ, ஒரு சமுதாயத்துக்கோ, ஒரு ஊருக்கோ, ஒரு மாநிலத்திற்கோ அவர்கள் நீரினை எப்படி மதிக்கிறார்கள் என்பதனைப் பொறுத்தே அவர்களின் வாழ்க்கை அமையும். 

        இந்தத் தேசத்தின் பண்பாட்டில் சடங்குகளில் நீருக்கு மிக முக்கியத்துவம் உண்டு. ஒரு ஒப்பந்தப் பத்திரத்தைக் காட்டிலும் நீரை கைகளில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுப்பது என்பது மிக அதிக உத்திரவாதத்தினைக் கொண்டதாகக் கருதப்பட்ட தேசம் இது. 

        நதிகளைத் தாயாகக் கடவுளாகப் பார்த்து வந்த தேசம். இயற்கையை பஞ்ச பூதங்களைக் கடவுளாகப் போற்றிய தேசம். அவை மூட நம்பிக்கைகள் அல்ல. ஆனால் அப்படி மூடநம்பிக்கை என்று பேசப்பட்டதால் இன்றையத் தலைமுறை தனது பண்பாட்டின் ஒரு கூறின் நீட்சியை அதன் பெருமையை உணராமல் துண்டித்துக் கொண்டு இருக்கிறது. 

        பாற்கடல் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு, கங்கையைத் தலைமேல் கொண்ட ஈசன், காவிரி உற்பத்தியாகக் காரணமான கமண்டலம் கொண்ட  அகத்திய முனி, இந்திரனுக்கான பூஜையை மறுத்து குன்றேந்தி நின்ற கோவிந்தன், குன்றிருக்கும் இடம் எல்லாம் கோவில் கொண்ட குமரன் இவை போன்ற இன்னும் பலவும் பிரபஞ்சத்திற்கு அடிப்படையானபஞ்ச பூதத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் பாரதக் கலாசாரக் குறியீடுகள். 

       ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஸ்தல விருக்ஷம், ஒரு தீர்த்தம், தீர்த்த


யாத்திரை என்ற ஒரு வழக்கம் இது அத்தனையும் நமது பண்பாட்டில். ஆனால் இன்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் அடியோடு பெயர்த்தெறிந்து விட்டு அதனடியில் இருக்கும் பிள்ளையாருக்கு கோவில் கட்டும் மூடத்தனம். எந்த ஸ்தல விருக்ஷமும் பெரிய அளவில் பாதுகாக்கப்படுவதில்லை. கோவில் குளங்கள் வழிபாட்டில் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

        உணர வேண்டியது, பெருமைப்பட வேண்டியது, கட்டிக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. வாழ்வில் வளமில்லையா, தொழிலில் பிரச்சினையா, சமூகத்தில் பிரச்சினையா பரிகாரம் ஒன்றுதான் இயற்கைக்கு எந்த குந்தகமும் நமது செயல்களால், நமது தொழிலால் நேரக் கூடாது.