ஞாயிறு, 16 மார்ச், 2025

குடும்பம் எனும் கலைப்படைப்பு


 வீதியில் நடந்து செல்கையிலும் வாகனத்தில் கடக்கையிலும் இரண்டு கவுதாரிக் கோழிகள் இணையாக நடந்து செல்வதைக் கவனிப்பதுண்டு. முதலில் நம்மைக் கண்டதும் மிகுந்த வேகத்துடன் ஓடி ஒளிந்தவை இவன் சைவ உணவுக்காரன் என்றறிந்தனவோ என்னவோ வேக நடைக்கு தன்னை மாற்றிக் கொண்டன.

அடிக்கடி அவற்றைக் காண்பதால் சில நேரங்களில் வாகனத்தை நிறுத்தி அவற்றிடம் கேட்பதுண்டு. இரண்டு பேரும் எத்தனை நாள் ஜாலியாக சுற்றப் போகிறீர்கள். பொறுப்பு வேண்டாமா? குடுப்பத்தினைப் பெருக்க வேண்டாமா எனக் கேட்பதுண்டு.
சற்றே நின்று தலையைச் சாய்த்து பார்த்து விட்டு செடிகளின் உள் நுழைந்து கடந்து சென்று விடுவார்கள் இருவரும். பின்னர் வீட்டுத் தோட்டத்தில் இருவரும் உலா வருவதுண்டு. எட்டிப் பார்ப்பதும் மறைவதுமாகவும் தங்களது உணவினைத் தேடுவதுமாக இருப்பர்.
சில நாட்களுக்கு முன்னர்தான் வாகனத்தை எடுக்கையில் கவனித்தேன்; சாலையோரமாக இரண்டும் தங்களது குஞ்சுகள் சூழ நடைபோட்டுக் கொண்டு இருந்தன. உடனே மகளை அழைத்தேன். இங்கே பார் இவர்கள் குடும்பமாக வந்திருக்கிறார்கள் என்று. எனது குரலைக் கேட்டதும் இரண்டும் தங்களது குஞ்சுகளுக்கு முன்னும் பின்னுமாக நின்று கொண்டன எதிர்ப்புற காட்டின் வேலியோரத்தில். மகள் வந்து பார்த்த பின்பு அவை அங்கிருந்து நகரத் துவங்கிவிட்டன. கேட்டுகிட்டே இருந்தே குடும்பமா வந்துட்டாங்க என்றாள் மகள்.
இரண்டு நாள் கழித்து குடும்ப சகிதமாக தோட்டத்துக்கு வந்துவிட்டனர். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த நான் மகளிடம் சொல்ல இன்னும் அருகே பார்க்க மகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி. எவ்ளோ குட்டியாயிருக்கு என்று ஆச்சரியித்தாள். பேஷன் ஷோவில் நடை பயில்வது போல வரிசையாக தோட்டத்தில் உலா வந்தார்கள். ஒரு குடும்பத்தினைப் பார்க்கையில் மகிழ்வு ஏற்படுகிறதுதானே. மீண்டும் சில நாட்கள் கழித்து அவர்கள் உலா வருவதைக் கண்டு மகள் அலைபேசியில் எடுத்த காணொளியைத்தான் இணைத்துள்ளேன்.
குடும்பம் என்பது மிக அழகானது. அது ஒரு ஆகச் சிறந்த கலைப்படைப்பு போலத்தான். இன்று வெள்ளித் திரையிலும் சின்னத் திரையிலும் படைக்கப்படுவதைப் போல நிச்சயமாக நமது குடும்பங்கள் இருந்ததில்லை,. ஆனால் இன்று குடும்பம் என்றாலே இப்படித்தானோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தும் வண்ணம் பல குடும்பங்களும் இயக்குநர்கள் கட்டமைத்த புனைவுகளை தங்கள் வாழ்க்கையில் பொருத்து இந்த தேசத்தின் அழகிய கலைப் படைப்படைப்பினைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு; இந்த வரிகள் குடும்பத்துக்கு இல்லையா? கூட்டுக் குடும்பமாக இருந்த போது ஒருவரை ஒருவர் தாங்கித்தானே குடும்பம் வலுவாக சிதையாமல் தன் நிலையிலிருந்து மேலெழுந்து வந்தது. ஆனால் இன்று சிறு சிறு துண்டுகளாக தேங்காய் சில்லுகளைப் போல சிதறி இருக்கும் பொழுது அந்தக் கலைப் படைப்பைக் காண இயலாத ஏக்கம் பல பெரியவர்களின் மனங்களில் ஆறாத இரணமாக இருக்கக் கூடும். அதில் வடியும் சீழினைக் கூட அவர்களால் வெளிப்படுத்தி விட இயலாது. கூட்டுக் குடும்பத்தில் இல்லாதிருந்தவர்களின் மனதில் கூட இனம் புரியாத ஏக்கம் இருக்கக் கூடும்.
இன்னமும் காலம் கடந்து விடவில்லை அந்த அழகிய கலைப் படைப்பினை மீளுருவாக்கம் செய்வதற்கோ, இன்னும் கூடுதலாக மெறுகேற்றுவதற்கோ இந்தத் தலைமுறை முடிவெடுத்தால் அதனைச் சாதித்துக் காட்டி விட முடியும்.
அலுவலகத்தில், நாம் செல்லும் சாலையில், நாம் செல்லும் ஊர்களில் இனந்தெரியாத முகந்தெரியாத மனிதர்களிடம் நம்மால் இணக்கமாக நடந்து கொள்ள இயலுகிறது. ஜாதி மதம் கடந்து சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என எழுதப் பேச முடிகிறது. அதனை நமது இரத்த உறவுகளிடம் நடைமுறைப்படுத்துவதில் என்ன வெறுப்பு, வன்மம் என்றுதான் புரியவில்லை,
தனித்து தனித்து என்கையில் நான் நான் என்கையில் நாம் தனிமைப்பட்டு நிற்கிறோம். ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் உயர்த்தி விட்டால் அந்த மகிழ்வை அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகையில் அது பல்கிப் பெருகுமல்லவா?
இந்தத் தலைமுறை நினைத்தால் இனி தனித்து பிரிந்து வாழப்போவதில்லை என்று முடிவெடுத்தால் நிச்சயம் சாதிக்க இயலும். வேலை வாய்ப்புக்காக சகோதரர்கள் வெளியே சென்று வசிக்க வேண்டியது இருக்கிறதா; காலையில் இரை தேடிச் செல்லும் பறவை மீண்டும் கூடடவைதைப் போலே ஒரு கூட்டை மட்டும் வைத்துக் கொள்ளலாமே? நம் குழந்தைகளை பெற்றோரிடமே விட்டு வளர்க்கலாமே. வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ நமது கூடடைந்து கூடிக் களிக்கலாமே.
இன்று பல குழந்தைகளுக்கு அவர்களது நெருங்கிய உறவுகளே அறிமுகமில்லாமல் இருக்கிற ஒரு கொடுமையான காலமிது. பல பெற்றோரும் தங்களது உறவின் குடும்ப நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. அதற்கு எப்பொழுதும் சொல்லப்படும் பதில் அவனுக்கு ஸ்கூல் இருக்கு. ஸ்கூலில் அடிக்கடி லீவு போடக் கூடாது என்பார்கள். குழந்தை அங்கன்வாடிக்குச் செல்வதாக இருந்தாலும் கூட.
//** முதலில் ஒவ்வொரு பண்டிகையையும் சகோதரர்கள் அனைவரும் பெற்றோருடன் சேர்ந்துதான் கொண்டாட வேண்டும் தனியாக அல்ல என்றூ முடிவெடுக்க வேண்டும். சகோதரர்கள் இல்லை சகோதரிகள் மட்டுமே என்றால் அன்று சிறிது நேரமாவது உங்கள் கணவர் குழந்தைகளோடு அவரவரது பெற்றோருடன் கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம்.
பெற்றோர் இல்லையா மூத்த சகோதரருடன் பண்டிகையைக் கொண்டாடலாம். எப்படியோ எங்கு சாத்தியமோ அங்கு அத்தனை உறவுகளும் ஒன்று கூடி அது தீபாவளியோ பொங்கலோ அனைவரும் ஒன்று கூடி கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்துச் செயல் படுத்திப் பாருங்கள். நிச்சயம் மாற்றத்தினை உணர்வீர்கள். **//
//**அன்பு கொடுப்பதற்காக; அன்பளிக்கும் வள்ளலாக நம்மை மாற்றிக் கொள்ள முயல்வோம்**//
இது எதுவும் சாத்தியமற்ற ஒன்றல்ல. மனம் அதனை விரும்ப வேண்டும் அவ்வளவே. உறவுகள் கூடிப் பிணைந்து வாழ்வது அனைத்து வளத்தினையும் பல்கிப் பெருகச் செய்யும். பெற்றோர்கள் நமது குழந்தைகளை அக்கறையுடன் வளர்ப்பார்கள்.
நாம் நமது வேலை என்று ஓடுகையில் வயதான பெற்றோர்கள் குழந்தைகளின் பொறுப்பினை ஏற்கையில் அவர்களது தனிமை விரக்தி ஆகியன விலக்கப்படும். அவர்களை அது அவர்களது கடைசி காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். நமது வேலை பளுவில் நம்மால் அளிக்க இயலாத நேரத்தினை குழந்தைகளுக்கு அவர்கள் அளிக்கக்கூடும். குழந்தைகளும் மிகச் சரியான பாதையில் செல்ல உதவும். முதியோர்கள் ஆதரவற்று இருக்கும் நிலை ஏற்படாது.
தாய் தந்தை உறவுகளைப் பிரிந்து எங்கோ தொலை தேசத்தில் கிடைக்கும் வாழ்க்கைதான் வாழ்க்கை என்று ஏமாந்து போகிறார்கள் பலரும். பணம், சொத்து சுகம் வாழ்விற்குத் தேவைதான். ஆனால் அதுவே வாழ்க்கை அல்ல. எதையும் கவனிக்க அதிசயிக்க பெருமைப்பட வாழ்த்த நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை. . வாழ்க்கை என்பது ஒவ்வொரு நொடியினையும் அனுபவித்து ரசித்து வாழத்தான்.
இந்தக் கவுதாரிக் குடும்பம் கூடித் திரிவது போல கூடி பொருள் தேடி, கூடி உணவருந்தி, கூடி இறை தேடி நாடி, வாழ்கையில் வரும் இன்பம் கோடி கோடி. பொருளை மட்டுமல்ல வேலையை இன்ப துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள நம்மருகில் நமக்காக ஒரு கூட்டத்தை உருவாக்கி வைப்பதுதான் ஒரு ஆகச் சிறந்த கலைப் படைப்பாக இருக்கக்கூடும்.
நமது வீட்டிற்கு நமக்காக விளக்கேற்ற வந்த பெண்ணை தாங்கித் தூக்கி கொண்டாடி மகிழ்ந்தால்தானே நமது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். நம்மைப் பிரிந்து இன்னொரு குடும்பத்தினை தூக்கி நிறுத்தச் சென்றுள்ள நமது வீட்டுப் பெண்ணினை மறக்காமல் அவளையும் அவள் குடும்பத்தையும் வாஞ்சையோடு அணுகுவதுதானே சாலச் சிறந்தது. வாழச் சென்ற பெண்ணோ வாழ்விக்க வந்த பெண்ணோ இரண்டு பேரையும் ஒன்றென ஒவ்வொரு குடும்பமும் உணர்கையில் குடும்பம் என்கிற கலைப் படைப்பு மிளிரத்தானே செய்யும்.
வாழ்க்கை ஆகச் சிறந்த ஓவியம்; ஆகச் சிறந்த இசை; ஆகச் சிறந்த நாட்டியம்; ஆகச் சிறந்த நாடகம்; இன்னும் என்னென்ன சொல்லலாமோ அத்தனையும் சொல்லலாம். ஆனால் அதனை அப்படி ஆகச் சிறந்ததாகச் செய்யும் உறுதியுடன் உறவுகளுடன் கூடி நிற்கும் குடும்பத்தால் மட்டுமே சாத்தியம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இது வெற்று வார்த்தை அல்ல; வாழ்வியல் பாதை.