வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

பண்பாட்டு இழை

 கலாசாரம் - ஆச்சாரம் என்ற வார்த்தைக்கு ஒழுங்கமைவு,  ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம். சந்திரகலையைப் போல வளர்ந்தும் தேய்ந்தும் ஒரு நிலையை அடைவதால் இதனை கலாசாரம் என்றனரோ☺️☺️ 


பண்பாடு - அந்தாளைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே என்று கிராமத்தில் பெண்கள் கூறுவார்கள். அதில்.வெறுப்பு இருக்காது ஆதங்கம் இருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன். இங்கு பாடு என்பது அன்றாட வாழ்க்கை என்றாகிறது. பண்பட்ட ஒரு வாழ்க்கை; பண் என்றால் இசை எனலாம், இசை வளர்ந்து செம்மைத் தன்மையினை இன்று அடைந்துள்ளது போல செம்மைத் தன்மை பெற்ற வாழ்வியலை பண்பாடு எனலாம்தானே?


இப்படி பண்பட்ட கலாசாரம்.தொன்மை வாயந்ததாக ஒன்று இந்தப் புவியில் இருக்கும் எனில் அது இந்த பாரத மண்ணில் இருக்கும் கலாசாரம்தான். 


திருக்குறள் இரண்டாயிரம்.ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். இன்று.உலகினில் இருக்கும் இரு பெரும் மதங்கள் அன்று உருவாகவில்லை. திருக்குறளுக்கு முந்தியது சங்கப்பாடல்களும் அதற்கும் பழமையதாய் தொல்காப்பியம். தொல்காப்பியம் நமக்குக் கிடைக்காத அகத்தியம் குறித்தும் பேசுகிறது. 


இதோ இரும்புப் பயன்பாடு திராவிட(திராவிட தென்னிந்திய நிலப்பரப்பினைக் குறிக்கும் சொல்) நிலத்தில் 5000 வருடங்களுக்கு முந்தியே இருந்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் வெளிவந்து இருக்கிறது. அறிவின் வளர்ச்சி என்பது ஒன்று இல்லாமல் இந்நிலையை எட்டி  இருக்க இயலாது. 


இலக்கியமோ வாழ்வியலோ அறிவியலோ கல்லணை சுட்டும் நீர் மேலாண்மையோ அது எதுவாகினும் இந்த மண்ணில் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு உச்ச நிலையை எட்டி இருக்கிறது என்றால் அதன் துவக்கம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்?


இனியாவது ஆங்கிலேயன் வந்துதான் நம்மைப் படிக்க வைத்தான். நமக்கெல்லாம் அறிவுக்கண்ணைத் திறந்தான் என்ற ஒரு அடிமை மனப்பான்மையைப் புறந்தள்ள நமக்கு மனம் வருமா? 


இந்தப் பண்பாடு கலாசாரம் இதனை அப்படியே பிரதிபலிக்கும் அழகிய வார்த்தைகளைக் கொண்டது தமிழ் மொழி. உண்மையில் இன்று வழக்கில் இருக்கும் சமஸ்கிருதம் அன்று வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. அது அறிவுசார் பதிவுகளை இந்தத் தேசத்துக்காக பதிந்து வைக்கும் ஒரு.பொது மொழி என்ற தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தமது படைப்புகளை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்திருக்கக் கூடும். பிராகிருதம்தான் அதிகம் புழக்கத்தில் இருந்த மொழியாக இருக்க வேண்டும். நிறக. 


சங்ககாலத் தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. நாற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக வாசனை புழக்கத்தில் வந்துவிட்டது. இன்று நாற்றம்.துர்நாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முடவன் என்ற சொல் இன்று மாற்றுத் திறனாளி என மாறி நிற்கிறது. மொழியின் அழகு தேய்ந்து வருகிறது. 


சமீபத்தில் கூட கந்தசஷ்டி கவசத்தில் வரும் சேரிள முலைமார் இதில் முலை என்ற சொல் ஆபாசமாக இருப்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். உணமைதான் மக்கள் மனதில் இது ஆபாசம் என்பதாகப் பதிந்துவிட்டது. அதனை ஆங்கிலத்தில் ப்ரெஸ்ட் என்று சொல்வதுதான் சரி என்ற நிலைக்குத் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.


 இன்று பல வார்த்தைகளுக்குத் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்யும் பொழுது நமது மொழியினை அதன் வளத்தை அதன் பெருமைக்கு மாசு கற்பிக்கிறோமே என்ற குற்ற உணர்வு எவரிடமும்.தோன்றுவதாகத் தெரியவில்லை. மாறாகப் பெருமை கொள்ளும் நிலை உருவாகி நிற்கிறது. 


தொல்காப்பியம் சங்கப் பாடல்கள் என்று பேசுகிறோமே எத்துணை பேருக்கு இவை முழுமையாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. கல்வி பயிலும்.ஒவ்வொருவுரும் முழுமையாக அறிந்திருக்க வேண்டியவை இவை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. நானும் அறிந்திலன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தயக்கமில்லை. வருத்தம் இருக்கிறது. 


நாம் நமது தாய்மொழி அதன் இலக்கிய வளப் பெருமையைப புறந்தள்ளி நல்ல தமிழ் வார்த்தைகளை பிறமொழி வார்த்தைகளில் இட்டு நிரப்புவோமானால் அங்கு நமது பெருமை கொண்ட பண்பாடு கலாசாரத்தின் பல்லாயிரக் கணக்கான ஆண்டாக கண்ணுக்குத் தெரியாமல் கட்டிக் காக்கின்ற நூலின் இழையும் அறுந்து.போகும். சிறிது சிறிதாக அறுந்து போக ஒரு நாள் மொத்த இழையும் அறுந்து.அடையாளம் அற்றவர்களாக நாம்.ஆகிப் போவோம். 


என்னதான் செய்ய வேண்டும். நமது மொழிவளத்தை நன்கு பயன்படுத்த வேண்டும். நாமும் நமக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நமது சந்ததிக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். பக்தி இலக்கியங்களோடு பழக.வேண்டும். 


நமது பண்பாட்டின் மீது பலமுனைத் தாக்குதல்கள் மேற்கத்திய சிந்தனைகள் வாயிலாக நிகழ்கிறது. அவை அவற்றைப் பெருமையாகவும் நம்மிடம் அது போன்ற எதுவுமில்லை என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன. குறள் காட்டும் ஒழுக்கங்களை இந்த.காலத்திற்கு ஏற்றதல்ல என்று எள்ளி நகையாடி ஒதுக்க வைக்கின்றன. 


நம்மையும் நமது குழந்தைகளையும் குடும்பத்தினையும் தவறான வழியில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது பண்பாட்டை உண்மை வரலாற்றை அறிய முற்படுவதும் நமது சந்ததிக்கு அறிமுகப் படுத்துவதுமே.